பாரதியாரை காவிக்குள் அடக்கிய பள்ளிக் கல்வித்துறை… எழுந்தது சர்ச்சை !!

By Selvanayagam PFirst Published Jun 4, 2019, 11:16 PM IST
Highlights

12ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தக அட்டையில் பாரதியாரின் தலைப்பாகை காவியாக வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. உடனடியாக அதை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். 

அதில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தமிழ் பாட புத்தகத்தில், பாரதியார் காவி நிறத்தில் தலைப்பாகை அணிந்திருப்பது போல் அட்டை படம் இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தாலும், புத்தகம் வெளியிடப்பட்டவுடன் மேலும் சர்ச்சையானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “12 ஆம் வகுப்பிற்கான தமிழ் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளைத் தலைப்பாகைக்குப் பதிலாக, காவி நிறத் தலைப்பாகையாக வரைந்து இருப்பது, வன்மையான கண்டனத்திற்கு உரியது. இது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை. திட்டமிட்டே வரைந்துள்ளனர். அட்டையில்தான் இந்த மாற்றமா? அல்லது, உள்ளே இருக்கின்ற பொருள்களிலும் மறைமுகக் காவித் திணிப்பு இருக்கின்றதா என்பதை, கல்வியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவிக்கையில், “பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது.மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதே போல் பல்வேறு அரசியல் கட்சியினரும் பாரதியாரை காவிக்குள் அடைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

click me!