Mask போடாததற்கு மேல சிறுநீர் கழிப்பீங்களா.. உங்களால் ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர்.. கொதிக்கும் DMK கூட்டணி கட்சி

By vinoth kumarFirst Published Jan 25, 2022, 11:17 AM IST
Highlights

காவல் துறையின் இத்தகைய செயல் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இதுபோன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயல் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது.

சட்டக்கல்லூரி மாணவர் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிற காவலர்கள் சட்டத்தினை கையிலெடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலை மாறும் என  சரத்குமார்,  ஜவாஹிருல்லா ஆகியோர் கூறியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் முகக்கவசம் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கிய சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியட்டுள்ள அறிக்கையில்;- சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவர் முகக்கவசம் அணியவில்லை என்று கூறி, காவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததையடுத்து, முகக்கவசம் அணிந்திருந்த மாணவர் ரஹீம் அபராத தொகை செலுத்த மறுத்ததால், காவலர்கள் மாணவர் ரஹீமை கைது செய்து, காவல்நிலையத்தில் அவரை நிர்வாணப்படுத்தி, அவர் மீது சிறுநீர் கழித்து, அருவருத்தக்க, கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அறிந்து பேரதிர்ச்சியும், பதட்டமும் அடைந்தேன்.

ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை போன்று, காவல்நிலையத்தில் மனிதாபிமானமின்றி நடந்தேறும் கொடூர தாக்குதல்கள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்தப்பட இந்த பிரச்ச்னையை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டையை காண்பித்தும் சட்டக்கல்லூரி மாணவர் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிற காவலர்கள் சட்டத்தினை கையிலெடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலை மாறும்.

மக்கள் பாதுகாப்புக்காக நேரம் பார்க்காமல் உழைக்கும் காவலர்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் மரியாதை இதுபோன்ற சில விரும்பத்தகாத செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீது அவநம்பிக்கையும், அச்சமும் உருவாக்கிவிடக்கூடாது. இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் கவனம் செலுத்தி சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமின் பாதுகாப்பையும், காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் துறையின் இத்தகைய செயல் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இதுபோன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயல் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான வழக்கு பிரிவுகளைச் சேர்த்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் மனித உரிமைக் கல்வி மற்றும் உளவியல் கல்வி ஆகியவற்றைப் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு தவறு செய்யும் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை உண்டாக்க வழி வகை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

click me!