கோடநாடு கொலை ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் சாதாரணமான விஷயமாக இருக்கலாம்.. புரட்டி எடுத்த தங்கம் தென்னரசு.

By Ezhilarasan BabuFirst Published Aug 23, 2021, 1:06 PM IST
Highlights

இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றத்தில் கொடநாடு கொலை வழக்கு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார். 

கோடநாடு விவகாரத்தை முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் கொண்டுவந்ததே இ.பி.எஸ். தான் என்றும், ஆனால், இப்போது அந்த பிரச்னையை சட்டப்பேரவை உள்ளே பேசக்கூடாது என அதிமுக சொல்வது முரணாக உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். 

கோடநாடு கொலை வழக்கில் மறு விசாரணை தொடங்கப்பட்டிருப்பது, அரசியல் களத்தை வெப்பம் அடைய செய்துள்ளது. விசாரணை நிறைவுற்று வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில், மீண்டும் அதை மறு விசாரணை செய்ய திமுக முயற்சிப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்றும், வேண்டுமென்றே தன்னுடைய பெயரை வழக்கில் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், காவல்துறையின் இந்த நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றத்தில் கொடநாடு கொலை வழக்கு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் அதை விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது சட்டமன்றத்தில் அதுகுறித்து பேசுவது சட்டமன்ற விதிகளுக்குப் புறம்பானது, கோடநாடு கொலை வழக்கை சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபு அல்ல என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை திமுகவின் கைப்பாவை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே, கோடநாடு கொலை வழக்கை திமுக சட்டமன்றத்தில் விவாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடநாடு விவகாரத்தை முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் கொண்டுவந்ததே இ.பி.எஸ். தான்; ஆனால், இப்போது அந்த பிரச்னையை சட்டப்பேரவை உள்ளே பேசக்கூடாது என அதிமுக சொல்வது முரணாக உள்ளது, கோடநாடு பங்களா ஒரு தலைமைச் செயலகமாக இயங்கியது, அப்படிப்பட்ட இடத்தில் ஒரு கொள்ளையும் அதனை தொடர்ந்து கொலையும் நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல, ஜெயக்குமாருக்கு வேண்டுமானாலும் அது சாதாரணமாக இருக்கலாம் எனவும், கோடநாடு விவகாரத்தை முதன்முதலில் சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்ததே அதிமுக தான், இதில் எங்களுக்கு எந்த வித பழிவாங்கும் எண்ணமும் இல்லை, அரசியல் உள்நோக்கமும் இல்லை என அவர் கூறியுள்ளார். 

 

click me!