எங்களுக்கே இந்த நிலைன்னா.. உங்களோட நிலைமையை கொஞ்சம் நினைச்சு பாருங்க.. திமுகவுக்கு எதிராக திமிரும் இபிஎஸ்.!

By vinoth kumarFirst Published Aug 18, 2021, 12:04 PM IST
Highlights

கொடநாடு வழக்கு முடியும் தருவாயில், குற்றவாளி சயனிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றது, வழக்கில் எனது பெயரை சேர்க்க நடந்த சதி என்று தகவல்கள் கிடைத்துள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது சயன் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்? 

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடியவர்களே அரசு வழக்கறிஞர்களாக ஆஜராகி வருகின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், சட்டப்பேரவைலிருந்து வெளிநடப்பு செய்து, கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி நடக்கிறது. கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர். குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞரான என்.ஆர். இளங்கோ ஆஜரானார்.  உதகை நீதிமன்றத்திலும் குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞர்களே ஆஜராகினர்.

கொடநாடு வழக்கை திசை திருப்ப திமுக அரசு முயற்சிக்கிறது. கொடநாடு வழக்கு சரியான பாதையில் செல்ல அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடநாடு வீட்டில் சயன் உள்ளிட்ட கூலிப்படையினர் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். கொள்ளை முயற்சியின்போது காவலாளி கொல்லப்பட்டார். கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த வழக்கில், கடந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர் தற்போது அரசு வழக்கறிஞராக மாறியுள்ளார்.

கொடநாடு வழக்கு முடியும் தருவாயில், குற்றவாளி சயனிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றது, வழக்கில் எனது பெயரை சேர்க்க நடந்த சதி என்று தகவல்கள் கிடைத்துள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது சயன் எந்தக் கருத்தையும் கூறாதபோது, தற்போது திடீரென அவரிடம் ரகசிய விசாரணை நடத்தப்படுவது ஏன்?  கடைசி நேரத்தில் என்னையும் கட்சி பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடக்கிறது. விசாரணை முடிவடையும் நிலையில் இருக்கும் போது அதனை மீண்டும் விசாரிப்பது திமுக அரசுதான். 

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக. திமுக எங்களை முடக்க நினைப்பது ஒருபோதும் நடக்காது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு, மக்களை திசை திருப்ப பொய் வழக்குகளை போட முயற்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது. பொய்யான வழக்குகளை கொண்டுவந்து அச்சுறுத்தும் நடவடிக்கைளை திமுக மேற்கொள்கிறது. இதனைக் கண்டித்து சட்டப்பேரவையை இன்னும் நாளையும் அதிமுக புறக்கணிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

click me!