
மீண்டும் வேகமெடுத்துள்ள கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து போலீசார் காய் நகர்த்தி வருகின்றனர்.
கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை தொடர்பான வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்கப்பட்டது. அதனை தடுக்க முயன்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் அவருக்கு உதவிய சேலம் எடப்பாடியை சேர்ந்த ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.
இதே போல் சயான் குடும்பத்தை சேர்ந்தவர்களும் விபத்தில் உயிரிழந்தனர். இதனால் இந்த வழக்கில் ஏராளமான மர்மங்கள் உள்ளன என அப்போது முதலே மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த கொலை வழக்கில் இதுநாள் வரை சிறையில் இருந்த கேரளாவை சேர்ந்த சயான் ஜாமீன் பெற்றார். அத்தோடு விசாரணைக்கு காவல் நிலையத்திலும் அவர் ஆஜரானார்.
அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கொடநாடு கொலை வழக்கில் மேலும் 3 சாட்சிகளை புதியதாக சேர்த்துள்ளதாக கூறுகிறார்கள். அத்தோடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 2 பேர் அப்ரூவர்களாக மாற ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு கொலை வழக்குதொடர்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஸ்டிங் ஆப்பரேசன் செய்து வெளியிடப்பட்டது. அதில் பேசிய சயான், இந்த கொள்ளையே எடப்பாடி பழனிசாமிக்காக நடைபெற்ற முயற்சி தான் என்று பேசியிருப்பார்.
இதனை தொடர்ந்தே இந்த வழக்கில் ஸ்டாலின் தரப்பு ஆர்வம் காட்டியது. அப்போது அதிமுக ஆட்சி என்பதால் வழக்கில் யாரையும் அப்ரூவராக்க போலீசார் விரும்பவில்லை. ஆனால் தற்போது திமுக ஆட்சி என்கிற நிலையில் இரண்ட பேர் அப்ரூவர் ஆகியுள்ளதாக கூறுகிறார்கள். அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்த வாக்குமூலம் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியை இந்த கொலை வழக்கில் சேர்ப்பதற்கான அடிப்படையாக இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். அதே போல் கொடநாடு வழக்கில் போலீசார் மூன்று முக்கிய சாட்சிகளை சேர்த்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளும் வழக்கில் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை குற்றஞ்சாட்ட உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதனிடையே கொலை வழக்கில் தொடர்புடையவர் என தேடப்பட்டு விபத்தில் உயிரிழந்த எடப்பாடியை சேர்ந்த டிரைவர் தொடர்பான வழக்கையும் சேலம் போலீசார் தற்போது கையில் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அப்போதே இந்த வழக்கில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிய அந்த டிரைவரின் உறவினர் ஒருவரை காவல் நிலையம் வரவழைத்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், இந்த வழக்கின் விசாரணையும் கொடநாடு வழக்கின் விசாரணையும் ஒருங்கிணையும் போது பல மர்மங்களுக்குவிடை கிடைக்கும் என்று புதிர் போடுகின்றனர் போலீசார்.