கொடநாடு பெயரை கேட்டாலே குலை நடுக்கத்தில் எடப்பாடியார்.. தைரியம் இருந்தால் அதிமுக விவாதிக்க தயாரா?

By vinoth kumarFirst Published Aug 23, 2021, 4:51 PM IST
Highlights

கொடநாடு விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. அங்கு சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டராக இந்த தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல வி‌ஷயங்கள் மர்மமான முறையில் நடந்துள்ளன. 

கொடநாடு கொலை, கொள்ளை  விவகாரம் மற்றும் ஜெயலலிதா இறப்பிற்கு நீதி திமுக ஆட்சியில் உறுதியாக கிடைக்கும் என செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை;- கொடநாடு கொலை- கொள்ளை விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வருவதற்கான மனுவை அளித்துள்ளேன். அதுபற்றி விவாதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க 7 நாட்கள் அவகாசம் உள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரையும் அளித்த பேட்டியில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது கொடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எப்படி விவாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அப்படி என்றால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்த அடிப்படையில் இந்த பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசினார். எந்த அடிப்படையில் பத்திரிகையாளர்களிடம் கொடநாடு விவகாரம் குறித்து பேசினார். ஆளுநரை சந்தித்து எப்படி மனு அளித்தார்.

கொடநாடு விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. அங்கு சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டராக இந்த தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல வி‌ஷயங்கள் மர்மமான முறையில் நடந்துள்ளன. கடந்த 2 நாட்களாக அதிமுக தொண்டர்கள் பலர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு நீங்களாவது கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளியில் வர சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

கொடநாடு விவகாரத்தில் எத்தனையோ கேள்விகள் உள்ளன. குற்றவாளியான சயன் டெல்லி சென்றது ஏன்? தமிழக போலீசார் உடனடியாக விரைந்து சென்று அவரை பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியிலும் பேசப்படும் வி‌ஷயமாக மாறியுள்ளது. எனவே சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் விதி எண் 55-ன்கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர எனக்கு உரிமை உள்ளது. அந்த அடிப்படையில்தான் அந்த தீர்மானத்துக்கு அனுமதி கேட்டு உள்ளேன்.

ஆனால், அதிமுகவினர் சட்டமன்றத்தில் விவாதிக்க பயப்படுகிறார்கள். அவர்கள் அஞ்சுவது ஏன்? இந்த விவாதத்தில் பங்கேற்க அவர்களுக்கு தைரியம் உள்ளதா? ஜெயலலிதா ஆத்மா அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. சட்டசபையில் விவாதிக்க அச்சமாக இருந்தால் மக்கள் மத்தியில் விவாதிக்க தயாரா? இந்த ஆட்சியில் நிச்சயம் கொடநாடு விவகாரத்தில் நீதி கிடைக்கும். முழு உண்மைகளும் வெளிவரும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

click me!