மற்றவர்கள் செய்த பணிகளை ஸ்டிக்கர் ஓட்டி தங்கள் பணிகளாக காட்டுவதில் முனைப்பு காட்டும் திராவிட மாடல் திமுக அரசு இந்த பேருந்து நிலையத்திற்கும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிட்டு அவசர கதியில் திறந்து வைத்துள்ளது.
மக்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளை திட்டமிடாமல் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வரும் காலங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான பணிகள் 90 சதவீதம் நடந்து முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பதவிக்கு வந்தது. 2021-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற திமுக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மீதமிருந்த 10 சதவீத பணிகளை கூட முழுமையாக முடிக்கவில்லை.
இதையும் படிங்க;- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. அடேங்கப்பா இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா!
பணிகள் முழுமையாக முடிக்காமல் மக்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதிகளை திட்டமிடாமல் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மற்றவர்கள் செய்த பணிகளை ஸ்டிக்கர் ஓட்டி தங்கள் பணிகளாக காட்டுவதில் முனைப்பு காட்டும் திராவிட மாடல் திமுக அரசு இந்த பேருந்து நிலையத்திற்கும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிட்டு அவசர கதியில் திறந்து வைத்துள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல படாதபாடு படுகின்றனர். நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும், அரசு பேருந்துகள் செல்லும் சாலையில் பள்ளி பேருந்துகள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் திருப்பி அனுப்புவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் நிலையில் அந்த பகுதியில் பேருந்துகளை இயக்க போதிய சாலை வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல் அந்த பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு பயணிகளுக்கும் எந்த ஒரு வசதிகளும் செய்து தரப்படவில்லை. பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை வைப்பதில் அவசரம் காட்டும் திமுக அரசு பணிகளை உரிய முறையில் முடிக்காதது ஏன்?
இதையும் படிங்க;- விமான நிலையத்திற்கு நிகராக பேருந்து நிலையம்; பொங்கலுக்குள் அனைத்தும் சரியாகவிடும் - அமைச்சர் தகவல்
கிளாம்பாக்கம் பேருந்துநிலைய பிரச்சனைகள் வரும் பொங்கலுக்குள் சரி செய்யப்படும் என அமைச்சர்கள் கூறுகின்றனர். வசதிகளை ஏற்படுத்தி விட்டு பேருந்து நிலையத்தை திறக்காதது ஏன்? 2023-ம் ஆண்டு திறந்ததாக கூறிக் கொள்வதற்காக அவசர கதியில் பேருந்து நிலையத்தை திறந்தது ஏன்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தும் பகுதியில் குறைவான இருக்கைகளே உள்ளன. மாநகர பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில் ஒரு இருக்கை வசதி கூட இல்லை. புறநகர், வெளியூர் பேருந்துகள் நிறுத்தும் இடத்துக்கு செல்லவும், அங்கிருந்து மாநகர பேருந்து நிறுத்தும் இடத்துக்கு வருவதற்கும் நேரடி வசதி இல்லாமல் உள்ளது.
மாநகரப் பேருந்து நிறுத்தத்துக்கும், அங்கிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிக்கும் எளிதாக பயணிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஏழை, எளியோர் குறைந்த விலையில் உணவு பெற அம்மா உணவகம் இல்லை. திறந்த ஒருசில நாட்களிலேயே கழிவறை முறையாக பராமரிக்கப்படாமல் மக்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. மக்கள் எளிதாக செல்வதற்கு அறிவிப்பு பலகை இல்லை. அவசர மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ வசதி இல்லை. இப்படி ஏராளமான குறைகளை அங்கு வரும் பயணிகள் அடுக்குகின்றனர். எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்த திராவிட மாடல் திமுக அரசு பயணிகளுக்கு உடனடியாக உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.