புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்.. கேரளா பட்டினிக்கு தள்ளப்படும் என எச்சரிக்கை

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2020, 12:15 PM IST
Highlights

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அது சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருப்பதாகவும் அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விவசாய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேபோல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக.காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில்  பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலமான கேரளா, தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கும் தனது தீவிர எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கான கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் பினராய் விஜயன் தாக்கல் செய்தார். 

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் பினராய் விஜயன் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால் அது கேரளாவை கடுமையாக பாதிக்கும் என்பதை தற்போதைய நிலைமை தெளிவுபடுத்துகிறது. பிற மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்கள்   நிறுத்தப்பட்டால் கேரளா பட்டினி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார். தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்திற்குப் பின்னர் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

click me!