மக்கள் பிரச்சனைகளுக்கு கை கோர்த்த முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் !! நம்ம ஊரில் நடக்குமா ?

By Selvanayagam PFirst Published Aug 11, 2018, 12:13 PM IST
Highlights

மக்கள் பிரச்சனைகளுக்கு கை கோர்த்த முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் !!  நம்ம ஊரில் நடக்குமா ?

ஆசியாவின் மிகப் பெரிய அணையான கேரள மாநிலம் இடுக்கி அணை 25 ஆண்டுகளுக்குப் பின் அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து தற்போது இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது இதனால் பெரியாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் செறுதோணி நகரில் உள்ள பாலம் மூழ்கியது.

பேருந்து நிலையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. செறுதோணி நகரம் முழுமையாக முடங்கிவிட்டது. கேரள மாநிலத்தின் மத்திய மாவட்டங்கள் பெரும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

நேற்று  பகலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் இடுக்கி அணைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை 11மணிக்கு மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி தலைமையில் இடுக்கியில் நடந்த அவசரக் கூட்டத்தில் அனைத்துக்கட்சியினர், அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில் இடுக்கி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை நடந்தது.இதனிடையே எர்ணாகுளம் மாவட்டத்தில் 57 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1076 குடும்பங்களைச் சேர்ந்த 3521 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து குடும்பங் களுக்கும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

மீட்புப் பணியில் தீயணைப்பு மீட்புத்துறையினர், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் முழுமையாக ஈடுபட்டுள்ளன. ஆலுவா, கொச்சி பகுதியில் மீட்பு நிவாரணப்பணிகளில் தேசிய மீட்புப்படை ஈடுபட்டுள்ளது. 50 பேர் கொண்ட என்ஏடி படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் முதலமைச்சர்  பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததுடன் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இன்று காலை முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

தமிழகத்தில் மழை வெள்ளம் வந்தபோது ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்கட்சித் தொண்டர்களும் கூட ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை. ஆனால் கேரளாவில் மக்கள் பிரச்சனைக்காக எதிரெதிர் துருவங்களே இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நம்ம ஊரில் இது நடக்குமா? என கேள்வியும் எழுந்துள்ளது.

click me!