இவர மாதிரி திமிரு புடிச்ச முதல்வரை நம்ம மாநிலம் கண்டதே இல்ல.. காங்கிரஸ் எம்பி கடும் தாக்கு

By karthikeyan VFirst Published May 7, 2020, 4:21 PM IST
Highlights

பினராயி விஜயன் அளவிற்கு திமிர் பிடித்த முதல்வரை இதுவரை கேரளா பெற்றதில்லை என்று காங்கிரஸ் எம்பியும் முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகனுமான முரளிதரன் விமர்சித்துள்ளார். 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதியான முதல் மாநிலம் கேரளா தான். கொரோனா உறுதியான ஆரம்பத்தில் மளமளவென கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை எகிறியது. ஆனால், கேரள அரசின் சிறப்பான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளால் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்தது. பாதிப்பு கட்டுக்குள் வந்தபின்னர், எந்தவிதத்திலும் மீண்டும் அதிகரிக்காத அல்லது பரவாத வண்ணம் கேரள அரசு திறம்பட செயல்பட்டு கொரோனாவை தடுத்தது.

அதன் விளைவாக கேரளாவில் வெறும் 503 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் மட்டுமே உயிரிழந்தனர். 400க்கும் அதிகமானோர் குணமடைந்தனர். சுமார் 90 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அதை கட்டுப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான்.

கொரோனா தடுப்பில் மற்ற மாநிலங்களுக்கு கேரளா முன்னுதாரணமாக திகழ்ந்தபோதிலும், மாநில முதல்வர் பினராயி விஜயனை மிகவும் திமிர் பிடித்த முதல்வர் என காங்கிரஸ் எம்பி முரளிதரன் விமர்சித்துள்ளார். 

கேரளாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணிகள் நடந்துவருகின்றன. ஊரடங்கால் 40 நாட்களுக்கும் மேலாக வேலையும் வருமானமும் இல்லாமல் இருக்கும் அவர்களது ரயில் கட்டணத்தை அவர்களே செலுத்தவேண்டிய சூழல் உள்ளது. அவர்களுக்கான ரயில் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்திற்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலப்புழா ஆட்சியரிடம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப்பெற ஆட்சியர் மறுத்துவிட்டார். அதேபோலவே கொச்சி, திருவனந்தபுரத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்ட பணத்தை ஆட்சியர்கள் வாங்க மறுத்துவிட்டனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பினராயி விஜயன், இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. இது ரயில்வேயின் முடிவு சென்று கூறிவிட்டார். இந்நிலையில் தான், பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்துள்ளார் முரளிதரன். 

பினராயி விஜயன் குறித்து பேசிய முரளிதரன், பினராயி விஜயனின் பதவிக்காலம் ஒருவழியாக இன்னும் ஓராண்டில் முடியப்போகிறது. இவரை மாதிரி திமிரு பிடித்த முதல்வரை இதுவரை கேரளா கண்டதில்லை. தினமும் மாலை நடக்கும் பிரஸ் மீட்டை, எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முரளிதரன். 

கேரளாவில் நான்குமுறை முதல்வராக இருந்த கருணாகரனின் மகன் தான் இந்த முரளிதரன். கோழிக்கோடு மாவட்டம் வடகரா மக்களவை தொகுதியின் எம்பியாக உள்ளார். 
 

click me!