
டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து திருடப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் இன்று அதிகாலை காசியாபாத் அருகே மீட்கப்பட்டது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய நீல நிற வேகன் ஆர் கார், நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்திற்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிற்பகலில் அந்த கார் திடீரெனக் காணாமல் போனது. மர்ம நபர்கள் சிலர் அந்த காரை திருடிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காரை கண்டுபிடித்து கொடுப்போருக்கு வெகுமதி வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் அரியானா ஒருங்கிணைப்பாளர் நவீன் ஜெய்ஹிந்த் அறிவித்திருந்தார்.
டெல்லியில் துணை ஆளுநர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கும் நிலையில், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கரையே திருடிச் செல்லும் அளவுக்கு இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காசியாபாத்தின் மோகன் நகரில் இருந்து கார் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் குந்தன் ஷர்மா என்பவர் இந்த காரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசாக அளித்தார். 2015 சட்டமன்றத் தேர்தல் வரை அந்த காரை கெஜ்ரிவால் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.