ஒரு ஃபோன் பேச மணிக்கணக்கில் காத்து நிற்கும் மக்கள் ! காஷ்மீர் அவலம் !!

By Selvanayagam PFirst Published Aug 15, 2019, 10:43 AM IST
Highlights

வெளியூரில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கு மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை  காஷ்மீர் மக்களுக்கு  ஏற்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 370-இன் கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை ரத்து செய்த மத்திய பாஜக அரசு, அதனை இரண்டு யூனியன் பிரதேசங் களாக மாற்றியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழும் என்பதால் ஒரு வாரத்திற்கு முன்பே சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய அரசு காஷ்மீரில் குவித்தது. பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தகநிறுவனங்களை மூட உத்தரவிட்டதுடன், தொலைத் தொடர்பு வசதிகளையும் முற்றிலுமாக துண்டித்தது. திங்களன்று பக்ரீத் பண்டிகையைக் கூட, காஷ்மீர் மக்கள் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

இந்நிலையில்தான், வெளியூரில் இருக்கும் உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு, காஷ்மீர் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தனிப்பட்ட தொலைபேசி இணைப்புகளை ரத்து செய்துள்ள மோடி அரசு, ஸ்ரீநகரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் மட்டும் அவசரத் தொலைபேசி வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.இந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர்களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்டவரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. 

அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது. இதனால் தங்கள் உரையாடலை கண்ணீருடன் தொடங்கி கண்ணீருடனேயே காஷ்மீரிகள் முடித்துக்கொள்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

click me!