கமல் கட்சிக்கு புது நிர்வாகிகள்... பசையுள்ள பார்ட்டிகளுக்கு முக்கிய பொறுப்பு..!

By Selva KathirFirst Published Aug 15, 2019, 10:04 AM IST
Highlights

 கமல் கட்சியின் புதிய நிர்வாகிகள் இரண்டு பேர் பசையுள்ள பார்ட்டி என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவில் கமல் கட்சியில் அவர்கள் இதுநாள் வரை பங்களிக்காத நிலையில் அடுத்த தேர்தலில் கூட்டணி – எம்எல்ஏ சீட் என்று ஆசை காட்டி அவர்கள் இரண்டு பேரையும் வளைத்து போட்டுள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திடீரென புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலரும் பசையுள்ள பார்ட்டிகள் என்று கிசுகிசுக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் வாக்குகளை பெற்றது கமலின் மக்கள் நீதி மய்யம். அதிலும் சென்னை, கோவை மண்டலங்களில் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றதால் கமல் கட்சி மீது எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி தாங்கள் தான் என்று கமல் மார்தட்டிக் கொண்டார். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியை வளர்க்கவும் கமல் முடிவு செய்தார்.

  

இதற்கிடையே கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தலையீட்டால் கமல் மீண்டும் பிக்பாஸ் பக்கம் போனார். பிக்பாஸ் முடியும் வரை கமலால் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட முடியாத நிலை இருந்தது. ஆனாலும் அவ்வப்போது கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கமல் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அதிலும் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன.

வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட சில குளறுபடிகளுக்கும் அருணாச்சலம் கைவண்ணம் தான் காரணம் என்று கொளுத்தி போடப்பட்டது. இதனால் அருணாச்சலத்தின் அதிகாரத்தை குறைக்க கமல் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் தான் கட்சிக்கு பொதுச் செயலாளர் ஒருங்கிணைப்பு என்கிற பதவியை கொடுத்துள்ளார் கமல். 

அதே சமயம் மவுரியா உள்ளிட்ட மேலும் 3 பேருக்கும் பொதுச் செயலாளர் பதவியை பிரித்து கொடுத்து மண்டல வாரியாக கவனிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். இதே போல் மாவட்ட அளவில் மட்டும் அல்லாமல் மண்டல அளவிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் கட்சியில் மாவட்ட அளவில் ஒரு சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க கமல் முடிவு செய்துள்ளார். 

இந்த அடிப்படையில் தான் திடீரென தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை கமல் கட்சி நேற்று அறிவித்தது. இதன் மூலம் கமல் கட்சியன் புதிய அதிகார மையமாக மவுரியா உருவெடுத்துள்ளார். மேலும் சிலருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் துணைத் தலைவராக மகேந்திரன் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரனுக்கு புதிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அவரை கமல் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே கமல் கட்சியின் புதிய நிர்வாகிகள் இரண்டு பேர் பசையுள்ள பார்ட்டி என்று தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவில் கமல் கட்சியில் அவர்கள் இதுநாள் வரை பங்களிக்காத நிலையில் அடுத்த தேர்தலில் கூட்டணி – எம்எல்ஏ சீட் என்று ஆசை காட்டி அவர்கள் இரண்டு பேரையும் வளைத்து போட்டுள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

click me!