கரூர் அல்லது கோவை..! அண்ணாமலை ஐபிஎஸ்க்கு இப்போதே தயாராகும் 2 தொகுதிகள்!

By Selva KathirFirst Published Sep 3, 2020, 11:03 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பலம் இருக்கும் என்பதால்கோவை அல்லது கரூர் தொகுதியில் போட்டியிடுவது என்று அண்ணாமலை முடிவெடுத்து தற்போது முதலே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் முகமாக இருக்கப்போவது அண்ணாமலை தான். பாஜகவின் துணைத் தலைவராக இருந்தாலும் கூட தேர்தல் சமயத்தில் அவருக்கு பிரச்சாரக்குழு தலைவர் அல்லது வேறு ஏதேனும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்கிறார்கள். இதே போல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கரூர் வருகை தந்தார். அதன் அடிப்படையில் தனது சொந்த மண்ணான கரூர் அல்லது பாஜகவிற்கு செல்வாக்கு அதிகம் உள்ளதாக கருதப்படும் கோவை ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில அண்ணாமலையை களம் இறக்க பாஜக முடிவு செய்துள்ளது.

அண்ணாமலை பாஜக மாநில துணைத்தலைவராக இருந்தாலும் அவருக்கு என்று பிரத்யேகமாக ஐடி டீம், லீகல் டீல், அரசியல் ஆலோசனை குழு என தனித்தனியாக சில குழுக்கள் இயங்கி வருகின்றனர். இந்த குழுக்கள் தற்போது முதலே கரூர் அல்லது கோவையில் அண்ணாலை போட்டியிட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருவதாக சொல்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளின் மன ஓட்டத்தை அறிந்து அதற்கு ஏற்ப வியூகம் வகுக்க அண்ணாமலை டீம் களம் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள். தற்போதைய சூழலில் பாஜக – அதிமுக கூட்டணி நீடிக்கிறது.

எனவே அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் போட்டியிடுவது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று அண்ணாமலை டீம் கருதுகிறது. கோவை மட்டும் அல்ல கரூரில் கூட அதிமுகவிற்கு அதிக செல்வாக்கு உண்டு. எனவே இந்த தொகுதிகளில் அண்ணாமலையின் இமேஜூம் கூடும் போது வெற்றி வாய்ப்பு எளிதாகும் என்பது அவர்களின் கணக்காக உள்ளது. மேலும் தொகுதி ஒதுக்கீட்டின் போது கூட கோவை மற்றும் கரூரில் ஒரு தொகுதியை எளிதாக பெற்றுவிடக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த இரண்டு தொகுதிகளிலும் அண்ணாமலை டீம் கவனம் செலுத்தி வருகிறது. இவைகள்  தவிர கன்னியாகுமரியிலும் பாஜகவிற்கு அதிக ஆதரவு உண்டு. எனவே அங்கு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பெரும்பாலும் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது ஜாதிய வாக்குகள் தான். அங்கு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு. ஆனால் அண்ணாமலை அங்கு போட்டியிட்டால் இந்த ஜாதிய வாக்கு வங்கி அவரை கைவிடக்கூடும் என்கிற சந்தேகம் உண்டு.

இதையும் படிங்க: மணப்பெண்ணாகவே மாறிப்போன சின்னத்திரை ‘நாயகி’... வித்யா பிரதீப்பின் வைரல் போட்டோஸ்...!

எனவே தான் அண்ணாமலை தனக்கு பாதுகாப்பான தொகுதிகளாக கருதி கரூர் அல்லது கோவையைதேர்வு செய்யலாம் என்கிறார்கள். மேலும் பாஜகவில் இணைந்த பிறகு தனது சொந்த ஊருக்கு கூட செல்லாமல் கோவைக்குத்தான் அண்ணாமலை சென்றார். எனவே அவரும் கூட கோவையில் போட்டியிடவே ஆர்வம் காட்டுவார் என்கிறார்கள்.

click me!