விடுதலை சிறுத்தைகளும் தமுமுகவும் ஒன்றுதான்: ஜவாஹிருல்லாஹ்வை தலையில் வைத்து கொண்டாடும் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 3, 2020, 10:35 AM IST
Highlights

2011 - 2016 காலகட்டத்தில்,  பேரவை உறுப்பினராக இருந்த  பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, சிறுத்தைகளின் குரலாக  பல்வேறு பிரச்சனைகளுக்காக உரத்துக் குரல் எழுப்பினார் என்பதும் நினைவுக்கூரத் தக்கதாகும்.

விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் வெகுமக்கள் இயக்கம் தமுமுக என விடுதலைச்சிறுத்தைகளின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது.  
ஐந்தாண்டுகளுக்கு முன்பே வெள்ளி விழா கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த ஆண்டு வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!  என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமுமுக இஸ்லாமியர்களுக்கான இயக்கம் என அழைக்கப்பட்டாலும், அது அனைத்துத் தரப்பு விளிம்புநிலை சமூகங்களுக்குமான ஒரு வெகுமக்கள் இயக்கம் என்பதை நாடறியும்.  அதாவது, இஸ்லாமியர் அல்லாத பிற எளிய மக்களின் நலன்களுக்காகவும் தொண்டாற்றி வரும் அமைப்பாகும். இது இருபத்தைந்து ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து இன்று வெள்ளிவிழா கொண்டாடுவது போற்றுதலுக்குரியதாகும். 

விடுதலைச்சிறுத்தைகள் ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல்; தேர்தல் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் செயலாற்றிய காலத்திலிருந்தே தமுமுகவுடன் இணைந்து பல்வேறு களங்களில் கைகோர்த்து போராடியிருக்கிறோம். இன்றும் அந்த நட்புறவு நல்லிணக்கமாகவே தொடர்வதை எண்ணிப் பெருமைப்படுகிறோம். ஆதிக்கம், ஒடுக்குமுறை மற்றும்  சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து சமூகநீதியை வழிமுறையாகக் கொண்டு சமத்துவத்தை வென்றெடுப்பதையே இலக்காகக் கொண்டு 1990களின் தொடக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் களத்திற்கு வந்தோம். அதே கொள்கைவழியில் 1995இலிருந்து இயங்கிவரும் மக்கள்  இயக்கம் தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் ஆகும். ஒரே இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கும் இருபெரும் விடுதலை இயக்கங்கள் தான் விசிகவும் தமுமுகவும். 

தேர்தல் அரசியல்  மறுப்பை முன்வைத்து சமூகக் களத்தில் விசிக எப்படி தொடக்கத்தில் செயலாற்றியதோ அப்படியே தமுமுகவும் இயங்கியது. அரச அடக்குமுறைகளை எப்படி விசிக எதிர்கொண்டதோ அப்படியே தமுமுகவும் சந்தித்தது. பின்னர், தேர்தல் அரசியலில் பங்கேற்பதன் மூலமே எளிய மக்களை அதிகாரமயப்படுத்த முடியும் என்று முடிவெடுத்து விடுதலைச்சிறுத்தைகள் ஒரு அரசியல் கட்சியாய் மாறியது போலவே(1999),  பின்னாளில் தமுமுகவும் தேர்தல் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து மமகவை தொடங்கியது. ஆக, இரு அமைப்புகளின் பாதையும் பயணமும் இலக்கும் நோக்கும் ஒரே நேர்கோட்டிலேயே அமைந்திருப்பதைக் காணலாம்.  இதனடிப்படையில், தமுமுகவுடன் எமக்குள்ள நெருக்கமும் தோழமையும் கால்நூற்றாண்டைக் கடந்தும் வெற்றிகரமாகத்  தொடர்கிறது.1999-இல் சென்னை கடற்கரை சீரணி அரங்கில் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி அம்மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது. 2001-இல் நான் சட்டப்பேரவை உறுப்பினரான போது, முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து பேசினேன். "தமுமுக மாநாட்டில் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று?" என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினேன்.

 

ஈராக் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால்  கொடூரமாகக் கொல்லப்பட்ட போது, அதனைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தமுமுகவினர் முற்றுகையிட்டனர். உடனடியாக அப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தன்னியல்பாக ஓடோடிச்சென்று இணைந்துகொண்டோம். தமுமுக நடத்தும் போராட்டம் நமது போராட்டமே என்ற உணர்வுதான் அதற்குக் காரணம். தர்மபுரி இளவரசன் மற்றும் திவ்யா ஆகியோரின் சாதிமறுப்புத் திருமணத்தை முன்னிறுத்தி, விசிக மீதும் குறிப்பாக என்மீதும் சாதிவெறிக் கும்பல் அபாண்டப் பழி சுமத்திய போது, விசிகவுக்கு உற்றத் துணை நின்ற இயக்கங்களுள் ஒன்று  தமுமுக என்பதை நன்றியுணர்வுடன் பதிவுசெய்ய விழைகிறேன். அதுபோல் சட்டப்பேரவையில் விசிக இடம்பெற இயலாத 2011 - 2016 காலகட்டத்தில்,  பேரவை உறுப்பினராக இருந்த பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, சிறுத்தைகளின் குரலாக  பல்வேறு பிரச்சனைகளுக்காக உரத்துக் குரல் எழுப்பினார் என்பதும் நினைவுக்கூரத் தக்கதாகும். 

இப்படி விசிகவும் தமுமுகவும் போராட்டக் களங்களிலும், அதிகார அவைகளிலும் தொடர்ந்து இணைந்தே பயணித்து வருகின்றன. இத்தகைய ஒருமித்த நட்புறவோடு கொள்கைப் புரிதலோடு தமுமுக  வெள்ளி விழாவைக் கொண்டாடுவதை எண்ணிப் பூரிப்படைகிறேன். முன்னெப்போதையும் விட இந்திய நாட்டை ஃபாசிச இருள் சூழ்ந்துள்ள கொடிய காலச்சூழலில், தலித்துகளையும் இசுலாமியப் பெருங்குடி மக்களையும் குறிவைத்து வெறுப்பு அரசியல் மேலெழும் நிலையில், அவற்றை முறியடிக்க விசிகவும் தமுமுக மற்றும் மமகவும் ஒருங்கிணைந்து, தலித்துகள் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு விளிம்புநிலை மக்களையும் அணிதிரட்டி உறுதியுடன் களமாட  உறுதியேற்போம் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!