திமுகவில் இருந்து விலகிய விஐபி !! அதிரடியாக அதிமுகவில் இணைந்தார் !!

By Selvanayagam PFirst Published Jan 6, 2020, 6:04 AM IST
Highlights

நெல்லை கருப்பசாமிபாண்டியன் நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில்  இணைந்தார்.

அதிமுகவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருப்பசாமிபாண்டியன், தனது 25-வது வயதிலேயே 1977-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர், அவருக்கு கட்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தார்.

திமுகவிலும் அவருக்கு நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், திமுக  தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2015-ம் ஆண்டு கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இதையடுத்து அதிமுகவின் பின்னணியில் இருந்த சசிகலா, டி.டி.வி.தினகரனால் ஓரங்கட்டப்பட்டார். இந்தநிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக. தலைமையை சசிகலா கைப்பற்றிய நேரத்தில், அக்கட்சியை விட்டு விலகி மீண்டும் 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். தற்போது, திமுகவை விட்டு விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

நேற்று இரவு சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று, அவர்களை சந்தித்து பூங்கொத்து வழங்கி அதிமுகவில் தன்னை கருப்பசாமிபாண்டியன் மீண்டும் இணைத்துக் கொண்டார்.

அவருடன் திமுக.வைச் சேர்ந்த முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செவல் ஹரி, களக்காடு ஒன்றிய முன்னாள் செயலாளர் எஸ்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இணைந்தனர்

click me!