
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸை, செல்போனில் மிரட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை துவக்கி, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கருணாஸ், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.
அப்போது அவருடைய செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், திருவாடானை தொகுதியில் நாங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். ஆனால் நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது என்று கூறியுள்ளார். சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, செல்போனில் பேசிய அவர், கருணாசுக்கு மிரட்டல் விடும் வண்ணம் பேசிவிட்டு, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நேற்று காலை கேணிக்கரை காவல் நிலையத்தில் கருணாஸ் புகார் கூறியுள்ளார். புகாரை பெற்ற கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
கருணாசுக்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அகிலன் (39) என்பவது தெரியவந்தது. இதனை அடுத்து புல்லூர் கிராமம் சென்ற போலீசார், அகிலனை கைது செய்து விசாரித்து வருகிறது.