தமிழகத்தில் 2 முதல்வர்கள் இருக்கும்போது, நீங்கள் ஆய்வு செய்யலாமா? ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பும் மும்மூர்த்திகள்

First Published Nov 15, 2017, 3:43 PM IST
Highlights
Karunas Thaniyarasu Thamimun Ansari joint statement


ஆளுநர் என்பவர் மாநில ஆட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பாளர் என்ற எல்லையைத் தாண்டி செயல்படுவதை ஏற்க முடியாது என்று அதிமுக அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவதற்காக நேற்று கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தின்போது கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள், தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால், அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டமும் நடைபெற்றது.

துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூ’ய்மை பணியிலும் அவர் ஈடுபட்டார். அதேபோல் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் அவர் ஆய்வு செய்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரண்டாவது நாளாக தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னரும், ஆளுநர் பன்வாரிலால் தூய்மை பணியில்
ஈடுபட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதா இருந்திருந்தால் இத்தகைய ஆய்வுக்கு அனுமதித்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் எம்.எல்.ஏ. தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஆளுநர் பன்வாரிலால், மரபுகளை மீறி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும், முதலமைச்சரும் இருக்கும்போது அந்த மாவட்ட அமைச்சர் வேலுமணியைக் கூட அழைக்காமல், ஆளுநர் ஆய்வு கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.

ஆளுநர் என்பவர் மாநில ஆட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பாளர் என்ற எல்லையைத் தாண்டி செயல்படுவதை ஏற்க முடியாது. புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சருக்கு போட்டியாக, ஆளுநர் கிரண்பேடி நீயா? நானா? என செயல்படுவதால் அங்கு இரட்டை தலைமைத்துவம் உருவெடுத்து நிர்வாகம் குழப்பத்திற்குள்ளாகி உள்ளது. இரட்டை தலைமைத்துவம் என்பது நிர்வாக சீர்கேட்டிற்கே வழிவகுக்கும். மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கையாண்ட உத்தியை, தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவுபடுத்தி, மாநிலங்களின் எஞ்சி நிற்கும் உரிமைகளையும் கபளிகரம் செய்யும் திட்டமாக இதனை பார்க்க வேண்டியிருக்கிறது.

மாநில சுயாட்சிக்கான முழக்கங்கள் வலுப்பெற்று வரும் நிலையில்,தமிழக கவர்னரின் சர்வாதிகார போக்கை தமிழக அரசும், முதலமைச்சரும்  மெளனமாக வேடிக்கைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரவர் எல்லையில் நின்று அரசு பணிகளைப் மேற்கொள்வதே ஜனநாயகத்திற்கு நல்லது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக ஆளுநர் அரசு நிர்வாகதிற்குள் நேரடியாக தலையிடும் இதுபோன்ற போக்குகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

click me!