
சசிகலாவிடம் விசுவாசம் காண்பிப்பதில் தினகரனை விட பல படி அதிகமாக நிற்பதாக கருணாஸ் எம்.எல்.ஏ. மீது நக்கலான விமர்சனத்தை எடப்பாடி தரப்பு அ.தி.மு.க.வினர் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ‘ஆம் நான் சசிகலாவின் விசுவாசிதான்’ என்று நெற்றியிலடித்தாற்போல் சொல்லி காலர் உயர்த்தியிருக்கிறார் கருணாஸ்.
கோயமுத்தூரில் அ.தி.மு.க.வின் 3 தோழமை கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. இதில் நடுநாயகமாக பேசியபோதுதான் கருணாஸ் இப்படி தன் சசி விசுவாசத்தை காட்டியதோடு எடப்பாடி அரசையும் அடித்து தூள் பண்ணியிருக்கிறார்.
மைக்கில் கருணாஸ்...”என்னை சின்னம்மாவின் அதி தீவிர விசுவாசி என்கிறார்கள்! ஆமாங்க உண்மைதான். இந்த உலகத்துல மனுஷனும், நாயும்தான் நன்றியுள்ள உயிரினங்கள். நான் நன்றியோட இருக்க ஆசைப்படுறேன்.
அம்மாகிட்டே சொல்லி எனக்கு சீட் வாங்கிக் கொடுத்து, இந்த கருணாஸை எம்.எல்.ஏ.வாக்கியது சின்னம்மாதான். அவங்களுக்கு நன்றியோட இருக்கிறதுதான் அழகு. இல்லேன்னா வள்ளுவர் சொன்ன மாதிரி செய்நன்றி கொன்றதால் ஏற்படுற பழிக்கும், பாவத்துக்கும் ஆளாகிடுவேன்.
தினகரனே ஒரு கட்டத்துல சின்னம்மாவை விட்டு விலகி நின்னாலும் நான் போகமாட்டேன். என்னைக்குமே சின்னம்மாவின் விசுவாசிதான் நான்.
என்னத்த ஆட்சி நடக்குதுங்க இங்கே!? என்னோட சொந்த தொகுதிக்கு எதையும் செய்ய முடியலை. எல்லா போஸ்டிங்குக்கும் காசு கேட்கிறாங்க. என்ன பண்ணுவாங்க என்னோட மக்கள்? ஆனா அவங்களுக்கு இந்த கருணாஸோட கையறு நிலை புரிஞ்சுகிட்டா போதும்.” என்று புலம்பிக் கொட்டிவிட்டே அமர்ந்திருக்கிறார்.