
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் திடீரென சந்தித்து திரும்பியிருக்கிறார் சசிகலா ஆதரவு எம்எல்ஏ கருணாஸ்.
கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைபிடிக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு "பலான" வசதிகளை செய்து கொடுத்தார் கருணாஸ் என சில இணைய பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதால் கொந்தளித்து போனார்.
தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகாரும் கொடுத்து விட்டார்.
சென்னையில் இப்படி என்றால் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாடனை தொகுதிக்குள் நுழைவது என்பதே பெரும் பாடாகியுள்ளது கருணாசுக்கு.
அங்குள்ள சிலை ஒன்றுக்கு மாலை அணிவிக்க சென்ற கருணாசுக்கு செருப்பு வீசி மரியாதை கொடுக்கப்பட்டது.
சென்னையிலும் எதிர்ப்பு, சொந்த தொகுதியிலும் எதிர்ப்பு, அவர் சார்ந்த திரை துறையிலும் எதிர்ப்பு என பலமுனை தாக்குதலுக்கு ஆளாகி விட்டார் கருணாஸ்.
தற்போது சசிகலா தரப்பிலும் பெரிய அளவுக்கு மரியாதை இல்லையாம் கருணாசுக்கு. சசிகலா ஜெயிலுக்கு சென்றுவிட்டதாலும் எடப்பாடி ஒருபக்கம், தினகரன் மறுபக்கம் என ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடி கொண்டிருக்கும் நிலையில் யாரிடம் அடைக்கலமாவது என்று குழம்பி போயுள்ளார் கருணாஸ்.
கருணாசின் இந்த இக்காட்டான நிலையை கண்ட பிஜேபி பிரமுகர் ஒருவர்தான் ரஜினியை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளுமாறு ஐடியா கொடுத்தாராம்.
விரைவில் ரஜினிகாந்தின் உதவியோடு மோடி அல்லது அமித்ஷாவை கருணாஸ் நேரில் சந்திப்பார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு நாள் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக பேசி வந்த கருணாஸ் ஜெயலலிதா மரணத்தில் மறைந்துள்ள விசயங்களை வெளிக்கொண்டு வர நீதி விசாரணை அமைத்தால் தவறில்லை என ரஜினியை சந்தித்த பின் பேட்டியும் கொடுத்துள்ளார்.
கருணாசின் இந்த பேச்சு சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எது எப்படியோ குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டது பிஜேபி.