
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கருணாசிடம், ஜெயலலிதா மீது இவ்வளவு மரியாதை வைத்துள்ள நீங்கள், அவரை அடக்கம் செயயும்போது செல்பி எடுத்தது ஏனோ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ''நான் செல்பி எடுத்தேனா'' என்று எதிர் கேள்வி கேட்ட கருணாஸ், ஏன் செல்பி எடுத்தார் என்பற்கு வினோத விளக்கத்தையும் கொடுத்தார்.
''பொதுவாக என் ரசிகர்கள், என்னை சந்தித்தபோது, என்னுடன் புகைப்படம் எடுக்க செல்பி எடுப்பார்கள். நானே சில சமயம், இடம் பொருள் ஏவல் தெரியாமல் நடந்து கொள்கிறீர்களே என கண்டித்துள்ளேன்.
ஜெயலலிதா மறைந்தபோது, பல தேசிய தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது வெளியூரில் இருந்து வந்த எனது ரசிகர்கள், என்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டனர். நான் இடம் கொடுக்கவில்லை.
ஆனால், ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, என்னுடைய வெளியூர் ரசிகர் ஒருவர், இனிமே சென்னைக்கே வரமுடியாது. என்னுடன் செல்பி எடுத்தே தீரவேண்டும் என கட்டாயப்படுத்தினார்.
இதனால், வேறு வழியில்லாமல், எல்லாம் முடிந்தபின், இரவு 11 மணிக்கு எடுக்கப்பட்ட செல்பி அது'' என்ற வினோத விளக்கத்தை கருணாஸ் அளித்தார்.
''செல்பி எடுக்கல... ஆனா எடுத்தோம்...'' என்கிற ரீதியான அவரது பதிலால் செய்தியாளர்கள் குழம்பி போயினர்.