
காவேரி மருத்துவமனையில் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 8.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை கோபாலபுரத்திலும், பின்னர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிஐடி நகர் இல்லத்திலும் அதன் பின்னர் காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவரும், தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை இருந்தவருமான திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் இரவு 8.30 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்படும்.
அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர் நள்ளிரவு 1 மணி வரை அங்கு வைக்கப்படும். பின்னர் 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கருணாநிதியின் உடல் சிஐடி நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காகவும் வைக்கப்படும் என அன்பழகள் தெரிவித்துள்ளார்.