
உடல்நிலை சரியில்லாமல் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் தொண்டர்கள் முன் தோன்றி என் உடன் பிறப்புகளே என பேசுவார் என்று துரை முருகன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாததால் கடந்த 2 மாதங்களாக ஓய்வு எடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து ஓய்வு எடுத்து வருவதால் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் திமுக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன், எடப்பாடி பழனிசாமியின் அரசு நிலையானது அல்ல என்றும் சசிகலா ஒரு துணைப் பொதுச் செயலாளரை நியமித்து விட்டு போயிருக்கிறார் என்றும் பேசினார்.
சசிகலா, மற்றும் டி.டி.வி.தினகரனின் பினாமி அரசாகவே எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது எனவும் துரை முருகன் பேசினார்.
நான் கலைஞரோடு 55 ஆண்டு காலம் வாழ்ந்தவன். கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் திமுக வுக்காகவும் பாடுபட்டவர்.
அந்த மாபெரும் தலைவனுக்கு பராக்கிரமசாலிக்கு தற்போது கொஞ்சம் உடல்நலம் தளர்ந்திருக்கிறது. கூடிய விரைவில் கலைஞர் கருணாநிதி பேசுவார். என் உடன் பிறப்புகளே என்று கரகர குரலில் தொண்டர்கள் முன்பு தோன்றி பேசுவார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.