
என் கணவரை எனக்கு எதிராக தூண்டி விட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட சசிகலா அணியினர் சதி செய்து வருகின்றனர். எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் அரசியல் பயணத்தை தொடர்வேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் களம் தாறு மாறாக படையெடுத்து வருகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதில் இருந்து சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போர்க்கொடி தூக்கி பல குற்றசாட்டுகளை முன்வைத்து வந்தார்.
ஆனால் சசிகலாவிடம் அவரின் பேச்சுக்களும் குற்றசாட்டுகளும் எடுபடவில்லை. சசிகலாவுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஒ.பி.எஸ்க்கு சசிகலா செயல்பாடுகள் குறித்து மனகசப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அம்மா வளர்த்த கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்தையும் பொறுத்து கொண்டு வந்துள்ளதாக பன்னீர்செல்வம் சொல்கிறார்.
தொடர்ந்து அடிமடியில் கைவைப்பது போல், பன்னீர்செல்வம் பதவிக்கே ஆப்பு வைக்க நினைத்தார் சசிகலா. இதனால் ஒ.பி.எஸ் பொங்கி எழுந்தார்.
சசிகலாவை எதிர்த்து மக்களிடையே ஆதரவு கேட்டார். அதனால் சசிகலாவால் ஒ.பி.எஸ்ஸை எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த அரசியல் நுணுக்கத்தை புரிந்து கொண்ட தீபா அவர் பாணியிலேயே மக்களிடம் ஆதரவு கேட்க திரும்பினார்.
அடுத்தடுத்து பேட்டிகள் எல்லாம் கொடுத்தார். ஒ.பி.எஸ்சுடன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தீபாவின் உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் உள்ளே நுழைந்த சிலர் தீபாவின் பேரவையில் அமளியை உண்டு பண்ணினர்.
இதன் விளைவு தீபாவின் புதிய அமைப்பு உதயம். மேலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல். தீபாவின் கணவர் ஒன்று சொல்ல, தீபா ஒன்று சொல்ல என பேரவையில் உச்சகட்ட குழப்பங்கள் நிகழ்ந்தன.
இதைதொடர்ந்து அனைத்து அரசியல்வாதிகளையும் ஊக்குவிக்கும் ஜெயலலிதாவின் சமாதி முன்பு தீபாவின் கணவர் மாதவன் அஞ்சலி செலுத்திவிட்டு தனிக்கட்சி தொடங்க போறேன் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து தீபா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :
அரசியலுக்கு வந்ததால் மிரட்டல்கள் விடப்பட்டன. ஆனால் எதற்கும் அஞ்சாமல் துணிச்சலாக செயல்பட்டு வந்தேன்.
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அழித்து விட வேண்டும் என சசிகலா குடும்பம் எனக்கு தொடர்ந்து பல இன்னல்களை அளிக்கிறது.
தற்போது கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி தொடங்க வைத்துள்ளனர்.
என் கணவரையே எனக்கு போட்டியாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.
என் குடும்பத்தை பிரித்து என்னை தனிமைப்படுத்தினால் நான் அரசியலில் போட்டியிடுவது சிரமமாகும் என்பது சசிகலா மற்றும் டிடிவி.தினகரனின் தவறான வியூகம்.
எனது கணவரை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
யாருடைய மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்வேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.