
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க மத்திய அரசும் மாநில அரசும் தயாராக இல்லை என திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும், விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறு நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யா கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள், சட்டை அணியாமல் உடலில் நாமத்தைப் பூசிக்கொண்டும் கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டு கொண்டும் போராட்டத்தை எடுத்து கொண்டு செல்கின்றனர்.
இதனிடையே டெல்லி சென்ற திமுக எம்.பி திருச்சி சிவா விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது, அவர்களுடையே கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி டெல்லி சென்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க தயாராக இல்லை.
விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்.
தேர்தல் நடக்கும் மாநிலத்தில் தான் மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
விவசாயிகளை நேரில் சந்தித்து மத்திய மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என தெரிவித்தார்.