எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்.. அதகளப்படுத்தும் திமுக.. அனுமதிக்குமா மத்திய அரசு.?

By manimegalai aFirst Published Feb 25, 2022, 6:42 PM IST
Highlights


நாட்டிற்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசியல் தலைவர், முன்னாள் பிரதமர்கள், போன்றோர்களை பெருமைப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களுக்கு தலைவர்களின் பெயர்களை சூட்டப்படுவது வாடிக்கையாகும்

 தற்போது கூட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சேவையை பாராட்டும் வகையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மணாலி - லே இடையே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. அந்த சுரங்கப்பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என பெயரிடப்பட்டது. இதே போல தான் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரயில் நிலையம் சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது. இதே போல ஆலந்தூர்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர்‌ அண்ணா ஆலந்தூர்‌ மெட்ரோ ரயில் என்றும் கோயம்பேடு  பேருந்து நிலையத்திற்கும் எம்ஜிஆர் பெயரையும்,.புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோவிற்கு  புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கோயம்பேடு எனவும் அப்போதைய அரசு மாற்றியது. சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூறும்‌ வகையில்‌, புறநகர்‌ பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.  

அப்போதே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரையும் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் அரசியல் காரணமாக அந்த கோரிக்கையை அதிமுக அரசு கண்டும் காணாமல் இருந்து விட்டது. தற்போது திமுக அரசு பதிவேற்றதும் சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்தும்,. மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் அந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பான திமுக வர்த்தகர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரை சூட்டியதுபோன்று தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் எனவே தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு ரயிலில் செல்ல முக்கிய இடமாக இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்ட வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக வர்த்தக அணி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்  சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட முடியும். எனவே மத்தியில் உள்ள பாஜக அரசு அனுமதி கொடுக்குமா? என்பது கேள்வி  குறியாகவே உள்ளது  

 

click me!