நிலமோசடி வழக்கு... கருணாநிதி மகள் செல்விக்கு சிக்கல்..!

By vinoth kumarFirst Published Sep 23, 2019, 4:40 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்விக்கு எதிரான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்விக்கு எதிரான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்தில் உள்ள நிலத்தை விற்பதற்காக மூன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி மீது நெடுமாறன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனவும் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், குற்றம்சாட்டுக்கு உள்ளானவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் நீதிமன்றத்திற்கோ மாற்ற வேண்டும். மேலும்,  பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதி, உயர்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை பூந்தமல்லி நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, செல்வி மற்றும் ஜோதிமணி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!