ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 கருணாநிதியின் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நமக்கு உயிரானவர் - நமக்கு கருவானவர் - நமக்குத் திருவானவர் - இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வரும் சூன் 3ஆம் நாள் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. திராவிட நாயகர் - தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதலிருந்து, 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி முகத்தைத் தொட்டோம்.
தமிழக ஆளுநரின் கருத்திற்கு திடீரென மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!உற்சாகத்தில் திமுக
ஆறாவது முறையாக தாய்த்தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கினார்கள். தலைவர் கலைஞர் அவர்களின் வார்ப்பாக மட்டுமல்ல, தலைவர் கலைஞராகவே செயல்பட்டு வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்
'சொன்னதைச் செய் - செய்வதைச் சொல்' என்று இன்றும் கலைஞரின் குரல் ஒலித்துக் கொண்டே இருப்பதால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கழகமும் கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் - அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த நம் கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க ”உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3, 2023 தலைவர் கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது.
திருவாரூரில் மாநாடு
தமிழின தலைவர் கலைஞர் தாய் தமிழ்நாட்டிற்கு தந்த திருவாரூரில் - சூன் 3 அன்று, தலைமை கழகத்தால் நூற்றாண்டு தொடக்கவிழா மாநாடு நடைபெற இருக்கிறது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை- கட்டிடங்கள் என்று சொல்வதை விட அன்னை தமிழ்நாட்டிற்கும்- இந்திய திருநாட்டிற்கும் தலைவர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பின் பசுமையான நினைவுச் சின்னங்களாக “கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை” அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.
அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பு
தொடக்க விழா மாநாட்டில், காலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், மாலையில் அகில இந்திய தலைவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். வரும் சூன் 3-ஆம் நாள் தொடங்கி அடுத்த ஆண்டு சூன் - 3 வரை ஓராண்டு காலம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக - மக்கள் விழாவாக - கொள்கை விழாவாக - வெற்றி விழாவாக- இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
தூக்கு தண்டனையை விட வலி குறைந்த மரண தண்டனை தேவை..! உச்சநீதிமன்ற கருத்திற்கு ராமதாஸ் எதிர்ப்பு