விஜய், அஜித்துக்கு ஒன்னுன்னா அவுங்க ரசிகர்கள் வராங்க... உங்களுக்கு ஒன்னுன்னா பாஜகவினர் ஏன் வராங்க..? ரஜினிக்கு 4 நறுக் கேள்விகள்!

By Asianet TamilFirst Published Jan 25, 2020, 8:32 AM IST
Highlights

தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் என எதற்கும் கேள்வி எழுப்பாமல், சுமார் ஐம்பது ஆண்டுக்கு முன்னர் இறந்து போன பெரியாரை இப்போது விமர்சிப்பது ஏன்? ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிரான பொதுத் தேர்வை குறித்து நாங்கள் பேசாமல் எங்களைத் திசை திருப்பத்தான் இந்த நாடகங்களா ? உங்கள் பதிலை அன்புடன் எதிர் நோக்கும் கார்த்திகேய சிவசேனாபதி” எனப் பதிவில் தெரிவித்துள்ளார்.

பெரியார் பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்துக்கு 4 முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளார் சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி.
துக்ளக் விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாடு குறித்து பேசினார். ரஜினி பேசிய அந்த விவகாரம் சர்ச்சையானது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழக அரசியல் இந்த விவகாரத்தையே வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் எங்களை திசை திருப்பத்தான் இதுபோன்ற நாடகங்கள் அரங்கேற்றப்படுகிறதா என்று சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் 4 கேள்விகளை ரஜினிக்கு முன் வைத்துள்ளார்.

 1 . பெரியாரையும் பெரியாரின் சித்தாந்தத்தையும் அறிந்து புரிந்து உணர்ந்து பேசுங்கள். பிதற்றல்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பச் சூழல் உங்களுக்குப் பெரியாரைப் பற்றி அறியும் வாய்ப்பை அளித்து இருக்காது. ஆதலால் உங்களுக்குப் பெரியாரைக் குறித்த சில புத்தகங்களை அன்பளிப்பாக அனுப்பி வைக்கின்றேன். படித்துப் பாருங்கள். முடிந்தால் பிறகு பதில் அளியுங்கள் .
2 . பல முறை நீங்கள் செய்தி தொடர்பாளர்களை உங்கள் வீட்டு வாசலில் சந்தித்துப் பார்த்து இருக்கிறேன். எதற்காக உங்கள் வீடு கதவுகள் எங்கள் ஊடக நண்பர்களுக்காகத் திறக்கப்படவில்லை? ஒவ்வொரு முறையும் உங்கள் வீட்டுச் சுவருக்கு வெளியில் நின்று தான் தமிழக ஊடகங்களைச் சந்திக்கிறீர்கள். இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்திலிருந்தும் தமிழர் பண்பான விருந்தோம்பலை நீங்கள் கற்றுக்கொள்ளாமல் இருப்பது ஆச்சிரியத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தெரியும், நாங்கள் சூத்திரர்கள்தான் பஞ்சமர்கள்தான் உங்கள் அகராதியில்.
ஆனால், நீங்கள் பொது வாழ்க்கையை ஏற்று இருக்கிறீர்கள், ஆக தங்களின் வீட்டு அலுவலகங்களின் கதவுகள் கூட எங்கள் ஊடக சகோதர சகோதரியினர்காகத் திறக்காதது ஏன்? உங்கள் மனப்பான்மை கேள்விக்குரியது! பலமுறை செய்தியாளர்களைச் சந்தித்துள்ள நான், ஒரு முறை கூட உங்களைப் போன்று வாசலில் நிறுத்திச் சந்தித்தது இல்லை. என்னைப் போன்ற சாமானியனே இதை எல்லாம் கடைப்பிடிக்கும்போது நீங்கள் ஓர் ஆன்மீக அரசியல்வாதி. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார். பெரும் பணக்காரர்.
நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற மனப்போக்கைச் எங்கள் செய்தியாளர்களிடம் "THE FOURTH PILLAR OF NATION " என்ற அழைக்கும் ஊடகத்தினரிடமே நீங்கள் இப்படி நடந்து கொள்வது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. ஆகவே இனியாவது உங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள எங்கள் ஊடக நண்பர்களின் சுய மரியாதையைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டுகிறேன்.
3 . பொதுவாக கமலஹாசன் குறித்தோ அவரின் கட்சியான மக்கள் நீதி மையம் குறித்தோ நடிகர்கள் விஜய் , அஜித், சூர்யா குறித்தோ இவர்களின் கருத்துகளுக்கு மாற்றாக யாரேனும் கருத்துகளை முன்வைத்தால் இவர்களின் விசிறிகள் அதற்குத் தக்க பதில் தருவார்கள், விவாதங்கள் முன்னெடுக்கப்படும், சில சமயங்களில் சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், உங்களுக்கு எதிர்வினையாகக் கருத்தைப் பதிவு செய்தால் உங்கள் ரசிகர்கள் அதற்கான பதிலையோ எதிர்வினையோ கொடுக்காமல், ஏன் பாஜகவின் H.ராஜா, K.T.ராகவன், இல.கணேசன், அர்ஜுன் சம்பத் ஆகிய இந்துத்வ ஆதரவாளர்களே உங்களுக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவு செய்கின்றனர். அவர்கள்தான் உங்களின் விசிறிகளா? அல்லது நீங்கள் அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவரா?


4 . உங்கள் படத்தைத் திரையரங்குகளில் ஆராதனை செய்து வரவேற்று இன்று தங்களின் பொருளாதார நிலைக்கான ஆதாரமான தமிழர்கள் மற்றும் தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய பலவிதமான விஷயங்கள் குறிப்பாக, நீட், கதிராமங்கலம், புதிய கல்விக் கொள்கை , ஹைட்ரா கார்பன் திட்டங்கள், ஐந்து மட்டும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு , நீட் தேர்வில் ஏழை எளிய மாணவர்கள் விண்ணப்பம் கூடப் பெற முடியாத சூழ்நிலை எனத் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் என எதற்கும் கேள்வி எழுப்பாமல், சுமார் ஐம்பது ஆண்டுக்கு முன்னர் இறந்து போன பெரியாரை இப்போது விமர்சிப்பது ஏன்?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிரான பொதுத் தேர்வை குறித்து நாங்கள் பேசாமல் எங்களைத் திசை திருப்பத்தான் இந்த நாடகங்களா ? உங்கள் பதிலை அன்புடன் எதிர் நோக்கும் கார்த்திகேய சிவசேனாபதி” எனப் பதிவில் தெரிவித்துள்ளார்.

click me!