கரூர் திமுக கதையைக் கேட்டா கண்ண கட்டுதே... செந்தில் பாலாஜி என்ன பாடு படப்போறாரோ?

By Asianet TamilFirst Published Jan 27, 2019, 12:23 PM IST
Highlights

திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் திமுகவில் நடந்த உள்ளடி வேலைகளை நினைத்து கரூர் மாவட்ட உ.பி.க்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.

திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் திமுகவில் நடந்த உள்ளடி வேலைகளை நினைத்து கரூர் மாவட்ட உ.பி.க்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.

தினகரனின் அமமுக கட்சியில் இருந்த செந்தில் பாஜாஜி, டிசம்பர்  14 அன்று திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து கரூரில் மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தை நடத்தி தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைத்தார். தொடர்ந்து கிராமச் சபை கூட்டங்களிலும் அதிகமானோரைப் பங்கேற்க செய்தார் செந்தில் பாலாஜி. அண்மையில் கரூரில் நடந்த கிராமச் சபைக் கூட்டத்தில் செய்த ஏற்பாடுகளைக் கண்டு ஸ்டாலின் செந்தில் பாலாஜியைப் பாராட்டினார். தொடர்ந்து ஸ்டாலின் மனதில் பசை போட்டு ஜம்மென்று உட்கார்ந்துகொண்ட செந்தில் பாலாஜியை மனம் குளிர செய்தார் ஸ்டாலின். திமுக மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த நன்னியூர் ராஜேந்திரன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியில் சேர்ந்த 40 நாட்களுக்குள் செந்தில் பாலாஜிக்கு கிடைத்துவரும் முக்கியத்துவத்தைப் பார்த்து திமுகவில் புகைச்சல் கிளம்பியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.  நீண்ட காலமாகவே கரூர் மாவட்டத்தில் நிலையான மாவட்ட செயலாளர் இல்லாமல் திமுக திண்டாடிவருகிறது. அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட பொறுப்பு திமுகவை வளர்த்தெடுக்க உதவும் என்று திமுகவினர் கூறும் அதே வேளையில், குறுகிய காலத்தில் இவ்வளவு வேகமாகவும் கட்சியின் மரபுக்கு மாறாகவும் பொறுப்பு வழங்குவதைக் குறைகூறுகிறார்கள்.

கரூர் மாவட்ட திமுக மிகுந்த புகைச்சலும் உள்ளடி வேலைகளும் நிறைந்த ஒரு மாவட்டம். கடந்த கால வரலாற்றைத் திரும்பி பார்த்தால், இதைப் புரிந்துகொள்ள முடியும்.  கரூர் மாவட்ட தி.மு.க. முதல் மாவட்ட செயலாளர் பரமத்தி சண்முகம். அப்போது வாசுகி, மாவட்ட மகளிர் அமைப்பாளராக இருந்தார். இவர்களிடையே நடந்த மோதல் காரணமாக வாசுகியை சற்று ஓரங்கட்டிவைத்தார் கருணாநிதி. பின்னர் ஸ்டாலின் ஆதரவுடன் 1999-ஆம் ஆண்டில் வாசுகி மாவட்ட செயலாளரானார். அதன்பிறகு வாசுகிக்கு நடந்தது பரமத்தி சண்முகத்துக்கு திரும்பியது.

2004-ம் ஆண்டி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழில்பதிபரான கே.சி. பழனிசாமி, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பினர் மாவட்ட செயலாளர் வாசுகிக்கும் பழனிசாமிக்கு ஏழாம் பொருத்தமானது. இருவருக்கும் நடந்த  பனி போரால் கரூர் மாவட்டத்தில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டதை எட்டியது. இதற்கிடையே 2006-ம் ஆண்டில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாசுகி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வாசுகி பெற்றி பெற்றால், அமைச்சராகும் வாய்ப்பும் இருந்தது. வாசுகியை எதிர்த்து அன்று அதிமுக சார்பில் போட்டியிட்டவர் இன்றைய திமுக பொறுப்பாளரான செந்தில் பாலாஜி.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி பெற மறைமுகமாக எல்லா உதவிகளையும் கே.சி. பழனிச்சாமி செய்தார் என்ற புகாரும் எழுந்தது. இந்த உள்ளடி வேலைகளால் அந்த தேர்தலில் வாசுகி தோற்கடிக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக  2009-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கே.சி. பழனிசாமியை வாசுகி தோற்கடித்தார் என்று கரூர் மாவட்ட திமுகவில் பேச்சு எழுந்தது. இதற்கிடையே 2009ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்தில் வாசுகி இறந்தார்.

இதன்பின்னர் மாவட்ட பொறுப்பாளராக நன்னியூர் ராஜேந்திரன்  நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் சேர்ந்தார் முன்னாள் அமைச்சர் சின்னசாமி. சின்னசாமி  வந்த பிறகு வாசுகி அணியினர் இவர் பக்கம் சாய்ந்தனர். 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சின்னாமி போட்டியிட் போது, நன்னியூர் ராஜேந்திரனும் பழனிசாமியும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். 2015ல் நடந்த உட்கட்சி தேர்தலில் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு நடந்த தேர்தலில் நன்னீயூர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். அதன்பிறகு கே.சி. பழனிசாமி, சின்னசாமியை ராஜேந்திரன்  ஓரங்கட்டினர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவாக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக செந்தில் பாலாஜியும் திமுக சார்பில் கேசி பழனிச்சாமியும் மோதினர். அரவாக்குறிச்சியில் தாராளமாகப் பண புழக்கம் இருந்ததால், தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். அதன் பிறகு நடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி பழனிச்சாமியைத் தோற்கடித்தார். இன்று செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாகி மாவட்ட பொறுப்பாளராகவும் உயர்ந்துவிட்டார்.

தற்போது அரவாக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு சீட்டா, கே.சி. பழனிச்சாமிக்கு சீட்டா என்ற பட்டிமன்றம் கரூர் திமுகவில் தொடங்கியுள்ளது. ஒருவருக்கு மட்டுமே சீட்டு கிடைக்கும் நிலையில், இன்னொருவருக்கு கரூர் நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், கடந்த  தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சின்னசாமி தனித்துவிடும் நிலையும் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு கிடைத்துவரும் முக்கியத்துவத்தாலும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அரவாக்குறிச்சியில் யாருக்கு சீட்டு கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்தும் திமுகவில் மீண்டும் உள்ளடி வேலை தொடங்குமோ என்பதுதான் திமுகவின் கடைமட்ட தொண்டனின் கவலை.

click me!