கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை ஓரம் கட்டிய காங்கிரஸ் !! அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ், ஜேடிஎஸ்…

By Selvanayagam PFirst Published Sep 3, 2018, 8:18 PM IST
Highlights

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

கர்நாடகத்தில் மைசூரு, துமகூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67.51 சதவீத ஓட்டுகள் பதிவாயின. 30 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கலபுரகி, சாம்ராஜ்நகர் ஆகிய 2 மாவட்டங்களில் 2 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மொத்தம் 2,633 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9,121 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சிகளில் அதன் தலைநகரிலும், தாலுகா தலைநகரங்களிலும் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது.  இந்த தேர்தலில் பாஜக , காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித் தனியே  போட்டியிட்டதால், எதிர்பார்ப்பு  அதிகரித்தது.

இதில், பாஜகவை  விட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.  காங்கிரஸ் 966 இடங்களையும், பாஜக 910 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 373 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

கர்நாடக நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜகவின் பின்னடவை பாஜக மாநில கட்சி தலைவர் எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் 1960 இடங்களையும், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தலா 905 இடங்களையும், தனித்து போட்டியிட்ட வேட்பாளர்கள் 1206 இடங்களையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது

click me!