நீங்க மட்டும்தான் கூட்டுவீங்களா? நாங்களும் கூட்டுவோம்ல.. முரண்டு பிடிக்கும் கர்நாடகா

First Published Mar 2, 2018, 10:39 AM IST
Highlights
karnataka government invite for all party meeting for cauvery issue


நூற்றாண்டுகள் கடந்து தொடர்ந்துவரும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. நடுவர் மன்றம் வழங்கிய நீரிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தமிழகத்திற்கு பாதிப்பாக இருந்தாலும், தமிழகம் வலியுறுத்திய காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு முன் பலமுறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

இதுதான் இறுதி தீர்ப்பு என்பதால், இந்த முறை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையே காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நடத்தப்பட்ட ஆலோசனையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது என்பதில் கர்நாடகா விடாபிடியாக உள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க வரும் 7ம் தேதி கர்நாடக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
 

click me!