வயலில் இறங்கி நாற்று நட்ட முதலமைச்சர்… விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய குமாரசாமி!!

By Selvanayagam PFirst Published Aug 12, 2018, 6:24 AM IST
Highlights

வயலில் இறங்கி நாற்று நட்ட முதலமைச்சர்… விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய குமாரசாமி!!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகாக விவசாயத் தொழில் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. விவசாய நிலங்கள்  அழிக்கப்பட்டு,குடியிருப்புகளாக  மாறி வருகின்றன. மழை பொழிவு குறைவு, நிலத்தடி நீர் குறைவு போன்ற பல காரணங்களால் விவசாயிகளுக்கு விவசாயம் அந்நியப்பட்டு போனது.

துணிந்து விவசாயம் செய்தவர்கள் பெரும் நஷ்டத்தையே சந்தித்தனர். இதையடுத்து இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை தடுக்க பல்வேறு விதங்களிலும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதும், தற்கொலை செய்வதுமான விபரீத முடிவுகளை விவசாயிகள் எடுத்துவருகின்றனர்.



தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா மற்றும்  தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிக அளவில் இருந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கர்நாடகாவில் முதலமைச்சராக பதவியேற்ற குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், மாண்டியா மாவட்டம் சீதாபுரா கிராமத்துக்கு சென்ற கர்நாடக முதலமைச்சர் அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்தார்.



அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக தாம் அணிந்திருந்த பேண்ட்டை மாற்றிவிட்டு வேட்டி கட்டிய குமாரசாமி, நிலத்தில் இறங்கி நாற்று நட தொடங்கினார். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் முதலமைச்சர் ஒரு சாதாரண விவசாயி போல வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நாற்று நட்ட நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



இதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, இங்கு தாம் நாற்று நட்டது யாரிடமும் தம்மை நிரூபிப்பதற்காக இல்லை என்றும், விவசாயிகளுடன் என்றும் தாம் இருப்பேன் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு தாம் செய்ததாக தெரிவித்தார். மேலும், விவசாயிகள் தற்கொலை போன்ற எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய குமாரசாமி  இனி மாதத்தில் ஒரு நாள் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் சந்திக்க உள்ளதாகவும்,  அவர்களின் குறையை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

click me!