எங்களோடு வந்தால் எல்லாம் கிடைக்கும்... கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பகிரங்க வலை!

By Asianet TamilFirst Published Jun 6, 2019, 6:44 AM IST
Highlights

 தற்போது மத்தியில் பாஜக அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருப்பதால், காங்கிரஸ் - மஜத கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சியில் இறங்கியுள்ளது. 

இதுவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மறைமுகமாக இழுக்க முயற்சி செய்துவந்த கர்நாடக பாஜக, தற்போது நேரடியாகவே அழைப்பு விடுத்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
 கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் -  ம.ஜ.த. கூட்டணி அரசு நடைபெற்றுவருகிறது. ஒரு பக்கம் பாஜகக் குடைச்சல். இன்னொரு பக்கம் கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியின் குடைச்சல் என இரு குடைச்சல்களையும் தாங்கிக்கொண்டு ஓராண்டை கடந்துவிட்டார் குமாரசாமி. இருந்தாலும் காங்கிரஸ் - மஜத தலைவர்களிடையே வார்த்தைப் போர் முற்றிவருகிறது. காங்கிரஸுடன் கூட்டணியை முறிக்க வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர் விஸ்வநாத் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.


இதற்கிடையே ஏற்கனவே கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மூன்று முறை முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்தது. தற்போது மத்தியில் பாஜக அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்திருப்பதால், காங்கிரஸ் - மஜத கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சியில் இறங்கியுள்ளது. இது நாள் வரை ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜக முயற்சி செய்து வந்தது. ஆனால், தற்போது வெளிப்படையாகவே பாஜகவுக்கு வாருங்கள் என அக்கட்சி அழைப்பு விடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.


பெங்களூருவில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்த மாநில மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். “காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜவுக்கு வாருங்கள். இங்கே வந்தால், எந்தப் பதவியையும் அடையலாம். பாஜகவுக்கு வந்தால் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். நாட்டுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் பாஜகவில் இணைய வேண்டும். இனி 50 ஆண்டுகள் கர்நாடகாவில் பாஜக ஆட்சிதான் இருக்கும்” என்று தெரிவித்தார்.


முரளிதர ராவின் இந்தப் பகிரங்க அழைப்பால், காங்கிரஸ் -  மஜத தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான எம்.பி.பாட்டீல் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். “எடியூரப்பா, பாஜகவில் உள்ளார். அவர், முதல்வராக வர வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சிக்கு அவர் வந்தால், முதல்வராக வசதியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

click me!