அடக்கடவுளே! பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியில் இப்படியா?... கலக்கத்தில் காரைக்கால்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 30, 2021, 9:38 AM IST
Highlights

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய பிரதமர் மோடி இன்று புதுச்சேரிக்கு வரவுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில், வேட்பாளர்கள் கொரோனா மற்றும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் கொரோனா தொற்றின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் அதிக அளவிலான மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டங்களில் பங்கேற்பது தொற்றின் வேகத்தை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை கடந்து தற்போது கொரோனா அரசியல் களத்திற்குள் புகுந்தது கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பொன்ராஜ் மற்றும் சந்தோஷ்பாபு ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், தேமுதிகவில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் எல்.கே.சுதிஷுக்கு கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து இரு தினங்களுக்கு முன்பு சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவரா, விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இப்படி அடுத்தடுத்து வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவதால், இந்த முறை வேட்பாளர்கள் இல்லாமல் ஆதரவாளர்கள், நண்பர்கள் மட்டுமே வாக்கு சேகரிக்கும் படலமும் அரங்கேறி வருகிறது. ​இந்நிலையில் காரைக்காலைச் சேர்ந்த அதிமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய பிரதமர் மோடி இன்று புதுச்சேரிக்கு வரவுள்ளார். கடலூர் சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள பரப்புரை கூட்டத்தில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் 30 வேட்பாளர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார். இதனையடுத்து அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது காரைக்கால் தெற்கு அதிமுக வேட்பாளரான அசனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 

click me!