
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளோடு, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தேர்தலும் நடந்து முடிந்தது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அப்பாவைத் தொடர்ந்து மகன் விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டது. பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், 68.80 சதவீத வாக்குகள் பதிவாகின.
தற்போதைய நிலவரப்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 706 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு லட்சத்து 07 ஆயிரத்து 893 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், விஜய் வசந்த் அவரை விட 58,813 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.