
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவின்போது, தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் உட்பட அனைரும் எழுந்துநின்று மரியாதை கொடுத்த நிலையில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தமிழை அவமானப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் வீடு என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் இதில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்தார்.
ஆனால் விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
தமிழ்தாய் வாழ்த்து என்ன அவ்வளவு அவமானமானதா என அங்கிருந்த தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்தனர். தமிழை அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விஜயேந்திரரின் இந்த செயல் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிடம் கருத்து கேட்போது, பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடினார்.