கடைசி வரை கறார் காட்டிய ஸ்டாலின்..! ராகுலிடம் பேசி டீலை முடித்த கனிமொழி!

By Selva KathirFirst Published Feb 21, 2019, 9:53 AM IST
Highlights

தனக்கான வாய்ப்பிற்காக காத்திருந்த கனிமொழி உடனடியாக டெல்லியில் உள்ள தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் பேசியுள்ளார். முகுல் வாஸ்னிக்கும் உடனடியாக கனிமொழியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார்.  அப்போது தமிழகத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் மற்றும் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தார்கள் என்கிற விவரத்தை எல்லாம் எடுத்துக் கூறி ஒரு தொகுதியை கூட வீணடிக்க கூடாது, நாங்கள் ஜெயித்தாலும் ஆதரவு ராகுலுக்கு தான் என்று ஐஸ் வைத்துள்ளார்.

தி.மு.க கூட்டணியில் இதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 1996 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரசில் இருந்து பிரிந்து தனியாக கட்சி நடத்திய மூப்பனாரின் த.மா.காவுக்கு 20 தொகுதிகளை கொடுத்துவிட்டு 17 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க போட்டியிட்டது. இதன் பிறகு 1998 தேர்தலிலும் மூப்பனாருக்கு 20 தொகுதிகளை கொடுத்தார் கலைஞர். அதன் பிறகு காங்கிரஸ் – த.மா.கா இணைந்தன. 2004 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் பத்து தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 11 தொகுதிகளை ஒதுக்கினார் கலைஞர். 

இது தான் கூட்டணியில் காங்கிரசுக்கு அதுநாள் வரை ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மிகவும் குறைவாகும். அதன் பிறகு 2009 தேர்தலில் கூட காங்கிரசுக்கு தி.மு.க 15 தொகுதிகளை வாரிக் கொடுத்தது. அதன் பிறகு தற்போது தான் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. தி.மு.க கூட்டணியில் பெரிய அளவில் வேறு கட்சிகள் இல்லாத காரணத்தினால் 2009ல் கொடுத்த 15 தொகுதிகள் வேண்டும் என்றே பேச்சுவார்த்தையை காங்கிரஸ் ஆரம்பித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது காங்கிரசுக்கு வாக்கு வங்கியே இல்லை என்றும் தேசிய கட்சி என்ற வகையில் தான் கூட்டணிக்கு தி.மு.க ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறி ஒற்றை இலக்கத்தில் தான் காங்கிரசுக்கான தொகுதிகள் குறித்து பேசப்பட்டு வந்தன. 

7 தொகுதியில் ஆரம்பித்த தி.மு.க 8 தொகுதிக்கு மேல் கிடையாது என்பதில் பிடிவாதம் காட்டியது. ஆனால் டெல்லியில் ராகுல்காந்தியோ இரட்டை இலக்க தொகுதி என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தான் கூட்டணி உறுதியாக பல மாதங்களாகியும் தொகுதிப் பங்கீடு உறுதியாகவில்லை. இந்த நிலையில் தான் அ.தி.மு.க – பா.ஜ.க – பா.ம.க கூட்டணி உறுதியாகும் தகவல் வெளியானது. இதன் பிறகும் தாமதிக்க கூடாது என்பதால் எட்டு தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அதுநாள் வரை காங்கிரஸ் தரப்பில் பேசிக் கொண்டிருந்த சபரீசன் ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ 11 தொகுதிகள் பிளஸ் புதுச்சேரி ஒன்று என 12 தொகுதிகள் என்று பிடிவாதம் காட்டியது. இந்த நிலையில் தான் சபரீசன் ஒதுங்கிக் கொண்டதால் கனிமொழியை காங்கிரஸ் தரப்பில் பேச ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தனக்கான வாய்ப்பிற்காக காத்திருந்த கனிமொழி உடனடியாக டெல்லியில் உள்ள தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் பேசியுள்ளார். முகுல் வாஸ்னிக்கும் உடனடியாக கனிமொழியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார்.  அப்போது தமிழகத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் மற்றும் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தார்கள் என்கிற விவரத்தை எல்லாம் எடுத்துக் கூறி ஒரு தொகுதியை கூட வீணடிக்க கூடாது, நாங்கள் ஜெயித்தாலும் ஆதரவு ராகுலுக்கு தான் என்று ஐஸ் வைத்துள்ளார். 

இதனால் 12 என்பதில் இருந்து 11 என காங்கிரஸ் இறங்கி வந்துள்ளது. ஆனால் ஸ்டாலினோ தமிழகத்தில் ஒன்பது புதுச்சேரியில் ஒன்று என 10 தான் கடைசி என்று கறார் காட்டியுள்ளார். இதன் பிறகு ராகுல் காந்தியை சந்தித்த கனிமொழி பத்து தொகுதிகள் என்பதே காங்கிரசுக்கு தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கை தான், நிச்சயமாக 40 தொகுதியிலும் வெல்லப்போகிறோம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பிறகும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால் ஊடகங்கள் கன்னா பின்னாவென்று எழுத ஆரம்பித்துவிடும் அது அ.தி.மு.க கூட்டணிக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்று கனிமொழி அடித்துவிட ராகுலும் பத்து தொகுதிக்கு ஓ.கே சொல்லியுள்ளார். 

ஆனாலும் கூட சென்னை வந்த கே.சி.வேணுகோபால் கடைசி வரை கூடுதலாக ஒரு தொகுதிக்கு போராடிப் பார்த்துள்ளார். ஆனால் வழக்கம் போல் ஸ்டாலின் மவுனமாக இருந்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் தமிழகத்தில் ஒன்பது புதுச்சேரியில் ஒன்று என பத்து தொகுதிகளுக்கு ஓ.கே சொல்லி வேணுகோபால் கையெழுத்திட்டுள்ளார். 15 தொகுதிகளில் ஆரம்பித்த காங்கிரசை 9 தொகுதிகள் வரை வரவழைத்துவிட்டு சபரீசன் அப்பீட் ஆக, கூடுதலாக ஒரு தொகுதியை ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக் கொடுத்து கூட்டணி பேச்சை சுமூகமாக முடித்துள்ளார் கனிமொழி. இதன் மூலம் டெல்லி அரசியலில் மீண்டும் லைம் லைட்டுக்கு கனிமொழி வந்துள்ளார்.

click me!