Chennai flood: முதல்ல உதவி பண்ணுங்க… அப்புறம் அரசியல் பண்ணுங்க… அண்ணாமலையை பங்கம் செய்த கனிமொழி

By manimegalai aFirst Published Nov 10, 2021, 7:55 PM IST
Highlights

மழை காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம், அதில் அரசியல் செய்வது நாகரிமாக இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி தந்துள்ளார்.

சென்னை: மழை காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம், அதில் அரசியல் செய்வது நாகரிமாக இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி தந்துள்ளார்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தட்டியெடுத்து வருகிறது. வெயிலை பார்த்து பல மாவட்டங்கள் ஆகி விட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருப்பத்தூர், கோவை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை விட்டபாடில்லை.

தலைநகர் சென்னையில் படகில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி  போட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த தாழ்வழுத்த பகுதியால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

சென்னையில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அம்மா உணவகங்களில் இருந்து உணவு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி துறை அதிகாரிகள் துரிதமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விசிட் அடித்து வருகின்றனர்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேட்டியை மடித்துக் கொண்டு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதே கையோடு திமுகவையும், தமிழக அரசையும் சாடிவிட்டு சென்றார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கட்சி முன்னணி நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். முழங்கால் அளவு தண்ணீரில் படகில் சென்று அவர் வெளியிட்ட வீடியோ ஏகத்துக்கும் டுவிட்டரில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் அவருக்கு மிக அருகிலேயே நின்று கொண்டிருக்கு அவர்களை போகுமாறு கூறிவிட்டு படகில் ஷூட்டிங் எடுத்து டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ளனர் என்று டுவிட்டராட்டிகள் போட்டு தாக்கி உள்ளனர். மழைநீரில் பாதிக்கப்பட்டவர்கள் நிற்க, படகில் சென்று பார்வையிடுகிறார் என்று விமர்சனங்களும் ஜெட் வேகத்தில் எழுந்தன.

அதற்கு பாஜக தரப்பில் பதில்கள் கொடுக்கப்பட்ட வந்தாலும் இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் முளைப்பதை தடுக்கமுடியவில்லை. இந் நிலையில் சென்னை தியாகராய நகரில் அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது: சென்னையானது மழை, வெள்ளத்தால் பலமுறை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தையும், மழையையும் சந்தித்து இருக்கிறது.

இது இப்போது வந்த பிரச்னை அல்ல. நீர் வழிப்பாதைகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதனால் பாதைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் மட்டுமல்ல, தூத்துக்குடியிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் குழப்பங்கள் உள்ளன.

இதற்கு தீர்வு காண முழு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நிச்சயமாக செய்வார் என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி கூறி இருப்பதாவது: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு இப்படி அரசியல் பண்ணுவது தவறான ஒன்று. முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

மழைக்காலம் முடியட்டும்… பின்னர் எங்கு தவறு நடந்தது என்று பேசலாம். மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் இப்படிப்பட்ட தருணத்தில் அரசியல் செய்வது நாகரிகம் இல்லை என்று கனிமொழி பதிலடி தந்துள்ளார்.

click me!