
அண்மைக் காலமாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் புகுந்துவிளையாடி வருகிறார். சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் உடனடி செய்தியாகி விடுகின்றன. தொடர்ந்து விமர்சனங்களும் விவாதங்களும் களை கட்டுகின்றன.
நடிகர் கமலஹாசன் தாம் ஒரு கடவுள் மறுப்பாளர் என்று வெளிப்படையாகக் கூறியவர். இருப்பினும், திரைப்படத்தில், “கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்றேன்” என்று பொடி வைத்துப் பேசியவர். இப்போது, அவர் மீது வைக்கும் விமர்சனமும் அத்தகையதாகத் தானிருக்கிறது.
அரசியல் ஆசை வந்துவிட்ட நிலையில், எப்போதும் போல், எல்லோரையும் போல், கடவுள் மறுப்புக் கொள்கைகளைக் கைகளில் பிடித்துக்கொண்டு கரை சேர முடியுமா என்று பலரும் அவருக்கு கேள்வி மேல் கேள்வியாக வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடவுள், மதம் என்றெல்லாம் நிரப்பி, அவர் ஒரு டிவிட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். நம்பினோர் கைவிடப்படார் என்பது நான் மறைத் தீர்ப்பு என்றொரு பாடலும் கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வாசகங்களும் புகழ்பெற்றவை. இந்நிலையில், நம்பியவர்களைக் கைவிட்டது ஆண்டவன் செயலல்ல.. ஆள்பவன் செயல் என்று பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.
நம்பியர்கள் கைவிடப்பட்டது மக்கள் நம்பும் ஆண்டவனின் செயல் அல்ல, மக்களை ஆளும் ஆட்சியாளர்களின் செயல் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் “கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது” என்று தெரிவித்துள்ளார்.