
நில வேம்பு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன்,
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்; ஆராய்ச்சி அலோபதியார் தான் செய்ய வேண்டுமென்றில்லை பாரம்பரியக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான் - என்று இரண்டு டிவீட்களாக தனது கருத்தை வெளிப்படுத்தினார் கமல்ஹாசன்.
எப்போதும் குழப்பியே கருத்து தெரிவிக்கும் கமல்ஹாசன், தனது இரண்டாவது டிவீட்டில், தெள்ளத் தெளிவாக, நில வேம்பு அருந்தினால் பக்கவிளைவு ஏற்படும் என்பதை பாரம்பரியம் என்று கூறி தன் கருத்தை விதைக்கிறார்.
ஆராய்ச்சி சாலைக்கு நிலவேம்பு அனுப்பப்பட்டிருக்கிறது; அந்த முடிவுகள் கிடைக்கப் பெறாதவரை நிலவேம்பு விநியோகத்தில் நீங்கள் எல்லாம் ஈடுபட வேண்டாம் என்று இயக்கத்தாரைக் கேட்டுக் கொள்கிறார் கமல்.
குறிப்பாக, டெங்குவை வைத்து மருத்துவம் பார்ப்பதற்குப் பதில், அரசியல் செய்து அரசை செயல்படவிடாமல் தடுப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படும் போது, அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு கமல் செய்யும் அரசியலாகவே இதனைப் பார்க்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்நிலையில், கமலின் அரைவேக்காட்டுத்தனமான அரசியல் விளையாட்டுக்கு சமூகத் தளங்களிலும், ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கமல், மற்ற எதிலும் அரசியல் செய்யட்டும், ஆனால் இது எத்தனையோ பேரில் உயிருடன் சம்பந்தப்பட்டது என்று சித்த மருத்துவர்கள் தெள்ளத் தெளிவாக நில வேம்பு குறித்த பின்னணியைக் கூறினர்.
இதனால் கலக்கமடைந்த கமல், தன் கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்து ஓர் அறிக்கையும் வெளியிட்டார்.
அதில்,
நிலவேம்பு குடிநீரை நம் நற்பனி இயக்கத்தினர் விநியோகிக்க வேண்டாம் என்று தான் கூறினேன். நிலவேம்புக்கு கமல் எதிர்ப்பு என்று செய்தி பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. மருந்தை அளவில்லாமல் கொடுப்பதை தவிர்க்கவே டுவிட்டரில் கருத்து வெளியிட்டேன். மருத்துவர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என கூறினேன். சித்தா, அலோபதி என்ற தனிச்சார்பு எதுவும் எனக்கு இல்லை. மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். - என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, காலையில் சொன்னதையே ஒரு எதிர்ப்பு வந்தவுடன் மாலையில் மாற்றிக் கொண்ட கமல், சற்றே தன் கருத்தில் ஜகா வாங்கிக் கொண்டார். மேலும், தான் அவ்வாறு சொல்லவில்லை என்று, சப்பைக் கட்டு கட்டினார். தான் சொன்னது தவறுதான் என்று ஒப்புக் கொள்ள மனம் இடம் தராத ‘நேர்மை’ கொண்ட அரசியல்வாதியாய் கமல் உருவெடுத்திருக்கிறார் என்பதையே அவரின் இந்த விவகாரம் நன்கு வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.