இந்த மாநிலத்த பாத்து கத்துக்கோங்க... மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்!!

By Narendran SFirst Published Dec 30, 2021, 2:27 PM IST
Highlights

ஜார்க்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

ஜார்க்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. பெட்ரோலின் விலை 110 ரூபாயை தாண்டி செல்ல, வரலாற்றில் முதன்முறையாக டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் சாமன்ய மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதால் அடுத்த நாளே விலையைக் குறைத்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும் டீசலுக்கு 5 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்களிலும் மாநில வாட் வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால் பாஜக ஆளாத மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அந்தந்த மாநில பாஜக தலைவர்கள், மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அந்த மாநில அரசுகளோ, நாங்கள் வாட் வரியை அப்படியே தான் வைத்திருக்கிறோம்; விலையைக் கூட்டியது மத்திய அரசு தான் என கூறிவிட்டார்கள். இருப்பினும் ஒருசில பாஜக ஆளாத மாநில அரசுகள் விலையைக் குறைத்து வருகின்றன.

மத்திய அரசு குறைப்பதற்கு முன்பே பெட்ரோல் விலையை 3 ரூபாய் அளவிற்கு தமிழ்நாடு அரசு குறைத்தது. அதேபோல சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் மாநிலமும் விலைக் குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் பெட்ரோலுக்கான விலையை மட்டும் குறைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாநில அளவில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மீது 25 ரூபாய் வீதம் அரசு நிவாரணம் அளிக்க முடிவு செய்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் விலையில் முழுமையாக 5 ரூபாய் குறைக்காத திமுக அரசு, இருசக்கர வாகனத்திற்கான பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைத்துள்ள ஜார்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது!

— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial)

இதனைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் விலையில் முழுமையாக 5 ரூபாய் குறைக்காத திமுக அரசு, இருசக்கர வாகனத்திற்கான பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைத்துள்ள ஜார்க்கண்ட் அரசை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!