Big Boss: காசுக்காக விதிகளை கைகழுவினாரா கமல்ஹாசன்…? பிக்பாஸால் எழுந்த சர்ச்சை…

By manimegalai aFirst Published Dec 6, 2021, 9:14 PM IST
Highlights

கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்ற பின்னர் தனிமைப்படுத்தி கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டது பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

சென்னை:  கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்ற பின்னர் தனிமைப்படுத்தி கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டது பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

கடந்த 22ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை அவரே தமது டுவிட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டேன், நோய்பரவல் நீங்கவில்லை என்று கூறினார்.

போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விரைவில் குணம் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவரின் ஆரூயிர் நண்பர் ரஜினிகாந்தும் வாழ்த்து கூறினார்.

நவம்பர் 22ம் தேதி கொரோனா பாசிட்டிவ், டிசம்பர் 4ம் தேதி கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வழக்கமாக ஒருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் அவர் நேரிடையாக வீட்டுக்கு வருவார் அல்லது கோயிலுக்கு  சென்று வருவர்.

ஆனால் கமலோ நேரிடையாக மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தான் சென்றார். அவரின் இந்த செயல்பாடு தான் இப்போது பெருத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை….

பொதுவாக ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற பாதிப்பு வந்துவிட்டால் மருத்துவமனையில் 7 நாட்கள் இருக்க வேண்டும். அதன் பின்னர் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவ ரீதியாக 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நடைமுறையை தான் சுகாதாரத்துறை அறிவித்து அனைவரும் அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் உலக நாயகனோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர் 7 நாட்கள் தனிமைபடுத்துதலில் இல்லாமல் பிக்பாஸ் ஷூட்டிங்குக்கு சென்றிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்து சர்ச்சையாகி இருக்கிறது.

கமலின் நடவடிக்கை பற்றி தான் இப்போது இணைய உலகில் கடும் விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்து இருக்கின்றன. இது குறித்து செய்தியாளர்கள் தரப்பில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதுவும் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் தான் பதில் சொல்லி இருக்கிறார்.

அரசின் கொரோனா விதிகளை மீறி கமல்ஹாசன் எந்த வகையில் அப்படி செயல்படலாம் என்று பெருத்த கேள்வி எழுந்து, கமலை சமூக வலைதளங்களில் தாளித்து எடுத்து வருகின்றனர். தேனியில் மாவட்ட ஆட்சியர் பேருந்தில், சாலையில் என வருவோர் போவோரை எல்லாம் அறிவிருக்கா? உன் பேர் என்ன? தாசில்தார் இவங்க அட்ரஸ் வாங்கி நோட்டீஸ் கொடுங்க என்று மாஸ்க் போடாதவர்களை போட்டு விளாசி தள்ளினார்.

சாதாரண மக்களை ஒருவிதமாகவும், ஸ்டார் அல்லது விஐபி அந்தஸ்தில் ஒருவரையும் அரசு வேறுபடுத்தி பார்க்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அரசு விளக்கம் கேட்கும் என்று கூறப்பட்டு இருக்கிறதோ தவிர விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை என்றும் சந்தேகங்கள் வெடித்திருக்கின்றன. பணத்துக்காகவும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகவும் இப்படி மருத்துவம விதிகளை கமல்ஹாசன் புறந்தள்ளலாமா? என்று கேள்விகள் செமத்தியாக எழுந்து இருக்கின்றன.

ஆனால் மக்கள் நீதி மய்யத்தின் தரப்பிலோ இதற்கு விளக்கம் வேறு மாதிரி இருக்கிறது. நவம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை உள்ள நாட்களை  (அதாவது 14 நாட்கள் வருகிறது) கணக்கில் எடுத்துக் கொண்டு பதில் அளித்து இருக்கின்றனர்.

மருத்துவர்கள் கொடுத்த அறிவுரை அல்லது கெடு என்பது டிசம்பர் 3ம் தேதியோடு முடிந்துவிட்டது. அது குறித்து மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. தனிமைப்படுத்துதல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆகையால் டிசம்பர் 4ம் தேதி அவர் பிக்பாஸ் தொடரில் களம் புகுந்தார் என்கின்றனர்.

மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு தான் சென்றார். ஒரு வேளை போகக் கூடாது என்றால் மருத்துவர்கள் சொல்லி இருப்பார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தரப்பு விளக்கம் கூறுகிறது.

சாதாரண மக்களுக்கு இதுபோன்ற நடைமுறைகள் கடுமையாக்கப்படும் விவிஐபிக்களுக்கு அவை இலகுவாக்கப்படும் என்பது ஒன்றும் புதிது இல்லை என்பது கமலின் விஷயத்தில் ஊர்ஜிதமாகிறது என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!!

click me!