கமல்- டி.டி.வி.தினகரனுடன் மூன்றாவது அணி... திமுக கழற்றிவிட முனைவதால் காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Nov 13, 2020, 2:49 PM IST
Highlights

திமுக கூட்டணி வெகு விரைவில் பிளவுபடும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இப்படி மூன்றாவது கூட்டணி அமைப்பது திமுகவின் வெற்றியை பாதிக்கும் என்பதே கடந்த கால உண்மையும் கூட. 

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, தமிழகத்தில் திமுக கூட்டணிக்குள் மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மோதலின் உச்சக்கட்டமாக காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 31 வயதே ஆன தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அங்கு அவருக்கு மிகப்பெரிய அலை உருவாகி இருந்தது. ஆனாலும், கூடாய் கூட்டணி கேடாய் முடியும் என்கிற கதையாக 70 இடங்களைப் பெற்றிருந்த கூட்டணி கட்சியான காங்கிரஸ் 19ல் மட்டுமே வெற்றிபெற்றதே அங்கு ஆட்சி அமைய முடியாததற்கு காரணம். 

இதனால் 125 இடங்களைப் பிடித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அங்கு ஆட்சி அமைக்கிறது. ’தேஜஸ்வியின் ஆட்சி அமைக்கும் கனவில் காங்கிரஸ் இப்படி மண்ணை வாரி போட்டுவிட்டதே!’என்கிற விமர்சனம் எல்லா பக்கங்களிலும் எழுந்து விட்டது. குறிப்பாக திமுகவில் காங்கிரசுக்கு எதிராக பெரும் புயலே உருவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் மூத்த நிர்வாகிகள், ‘’கடந்த தடவைகள் போல காங்கிரசுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டாம். அப்படி கொடுப்பது, நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்வது போன்றது. அதிகபட்சம் 20 இடங்கள் கொடுத்தால் போதும். அதற்கு ஓப்ப்புக்கொள்ளாமல் கூட்டணியை விட்டு வெளியேறினாலும் பரவாயில்லை. இந்த விஷயத்தில் நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும்’’ என ஸ்டாலினிடம் எடுத்துக் கூறு வருகிறார்கள். 

கூட்டணி கட்சி இப்படி தங்களுக்குக் குழி வெட்டுவது காங்கிரஸ் தரப்பையும் எட்டியுள்ளது. சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ’’பீகார் அரசியல் சூழலும், தமிழக அரசியல் சூழலும் வெவ்வேறானவை. தமிழகத்தில் காங்கிரஸ் இன்றைக்கும் உயிர்த் துடிப்போடு இருக்கிறது. எனவே பீகார் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் திமுக முடிவெடுக்குமானால் இழப்பு அவர்களுக்குத்தான்.  அத்தகைய சூழலில் காங்கிரஸ் தலைமையில் நிச்சயம் மூன்றாவது அணி உருவாகும். இது தொடர்பாக ரகசியமாக சில வேலைகள் நடைபெற்று வருகின்றன’’  என கொளுத்திப் போட்டிருக்கிறார். பிகார் பாடத்தை நாம் அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கற்றுக் கொள்ள வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக் கொடுக்கக் கூடாது. பிகார் தேர்தலை காரணம் காட்டியே நாம் காங்கிரஸுக்கு 20 முதல் 30 தொகுதிகள் மட்டுமே கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேஜஸ்வி யாதவ் மாதிரி நாமும் இலவு காத்த கிளியாக மாற வேண்டிய நிலை ஏற்படும்’என்று எச்சரித்து இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான சில எம்பி.க்களும், ‘காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகளைக் கொடுப்போம். அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் கூட்டணியை விட்டுப் போகட்டும். காங்கிரஸால் நமக்கு சாதகங்களை விட பாதகங்கள்தான் அதிகம். நம் மேல் மூர்க்கத்தனமாக பாஜக தாக்குதல் நடத்துவதற்குக் காரணம், இந்தியா முழுதும் செல்வாக்கு இழந்துகொண்டிருக்கும் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் நாம் உயிர்கொடுத்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். எனவே காங்கிரசுக்குக் குறைவான தொகுதிகள் கொடுப்பது, அல்லது கூட்டணியில் இருந்து விடுவிப்பதுதான் நல்லது’ என்று எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே கழக கட்சி( திராவிட) கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார் கமல்ஹாசன். ஆகையால் இதனை மனதில் வைத்து கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து புதிய அணி ஒன்றை அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ராகுல் காந்தி வாழ்த்து சொன்னதை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் நிர்வாகிகள், இந்த அணியில் டி.டி.வி.தினகரனின் அமமுக உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் திமுக கூட்டணி வெகு விரைவில் பிளவுபடும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இப்படி மூன்றாவது கூட்டணி அமைப்பது திமுகவின் வெற்றியை பாதிக்கும் என்பதே கடந்த கால உண்மையும் கூட. 

click me!