
முடங்கி கிடக்கும் தமிழகத்துக்கு இனி அம்மாவும் நீயே..! அப்பாவும் நீயே...! என்று கமல் ரசிகர்களால் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த போஸ்டர் வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் கமல் ஹாசன், தனது சுற்றுப்பய திட்டத்துக்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார். கட்சி, கொடி, கொள்கைகளைப் பற்றி மதுரையில் அறிவிக்க உள்ளதாகவும் நாளை துவங்கும் அரசியல் பயணத்துக்கு நடிகர் கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சி தொடங்குவது தொடர்பாக, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து பெற்றார். நாளை தனது அரசியல் களத்தில் கமல் இறங்க உள்ளநிலையில், மதுரை, ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதால், கமல் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதில் சில போஸ்டர்கள் மக்கள் மனதை ஈர்த்து வருகிறது. அதாவது, நடிகர் கமல் ஹாசனின் முகம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வடிவில் அமைக்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.
அந்த போஸ்டரில், முடங்கிக் கிடக்கும் தமிழகத்துக்கு இனி அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. மேலும், ஆண்டவர் கமலின் அரசியல் பிரவேசம் என்று, அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரும் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வடிவத்தில் ரஜினியின் முகம் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில், வெற்றி காணுங்கள்...! மெகா பாரதம்...! சத்தம் இல்லாமல் சுத்தம் செய்வோம்! என்றும் "அரசியல் சாக்கடை..." "ஆக்கலாம் பூக்கடை" என்று அச்சடித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கமல் மற்றும் ரஜினி ரசிகர்களால் ஒட்டப்பட்டு வரும் இந்த இரு போஸ்டர்களும், வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.