
எமகண்டம் உச்சத்திலிருக்கும் நேரத்தில் ஸ்டாலினின் மனதில் ‘கள ஆய்வு’ சிந்தனை வந்ததோ என்னவோ! இந்த சீசன் முழுக்க உட்கட்சி பற்றிய கடுமையான பிரச்னைகளைத்தான் சந்தித்து கவலையில் ஆழ்ந்திருக்கிறார் ஸ்டாலின்.
அந்த வகையில் ’கட்சியில குறுநில மன்னர்களை வீழ்த்துங்க தளபதி’ என்று எழும்பியிருக்கும் புதுக்குரல், அவரை அதிர வைத்திருக்கிறது.
திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஒருவர், தங்கள் மாவட்ட கள ஆய்வின் போது பேச எழுந்திருக்கிறார். தொண்டையை செருமியபடி பேச்சை துவக்கியவர், “சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க தளபதி. நம்ம கட்சியில மன்னராட்சி முறை பாடா படுத்துது. கழக ஆட்சி வருதுன்னாலே மாஜி மந்திரிகளுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும்தான் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வந்து சேருது.
கழகம் ஆளுறப்பவெல்லாம் பொதுப்பணி துறையில துரைமுருகனை தவிர வேற யாரும் உட்கார கூடாதா? போக்குவரத்து துறைன்னா நேரு மட்டும்தானா? பொங்கலூர் பழனிசாமியையும், ஐ. பெரியசாமியையும், கீதா ஜீவனையும், பொன்முடியையும், வெள்ளக்கோயில் சாமிநாதனையும் விட்டால் ஆளே இல்லையா. காலங்காலமா கட்சிக்கு உழைச்சுட்டிருக்கிற பலர் என்னைக்குதான் எம்.எல்.ஏ. பதவியையும், அமைச்சர் பதவியையும் பார்க்கிறது?
மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. வாய்ப்பு, அமைச்சர் பதவி இதெல்லாம் நம்ம கட்சியில கணிசமான நபர்களுக்கு நிரந்தர அங்கீகாரமாகவே அமைஞ்சு கிடக்குது. அவங்களை பார்த்து தலைவரே!ன்னு சொன்ன நாங்க, அவங்களுக்கு பிறகு அவங்க வாரிசுகளை பார்த்து அதே வார்த்தையை சொல்றோம். தலை முடி நரைச்சு, பல்லெல்லாம் வுழுந்துட்டாலும் கூட இவங்களுக்கு பரம்பரை பரம்பரையா கூஜா தூக்கிடு திரியுறோம்.
கட்சியில சேர்ந்ததுல இருந்து, கடைசி வரைக்கும் எடுபிடியாவே காலந்தள்ளுற எங்களை பார்த்து எங்க வூட்டுல உள்ளவங்களே வெட்கி வேதனைப்படுறாங்க. அதனால இந்த குறுநில மன்னராட்சியையும், மன்னருக்கு பிறகு இளவரசன் பட்டம் சூடுறதையும் ஒழியுங்க தளபதி.” என்று நெத்தியடையாய் போட்டுடைத்திருக்கிறார்.
ஸ்டாலினும் மெளனமாக தலையசைத்து கேட்டுக் கொண்டாராம்.
பலே! தி.மு.க.வில் ஜனநாயகம் தழைத்தோங்குவது ஆரோக்கியமான செய்திதான்.