கோவை தெற்கில் கடைசி வரை மல்லுக்கட்டிய தனி ஒருவன்... வானதியிடம் வீழ்ந்த கமல்..!

By Asianet TamilFirst Published May 2, 2021, 10:33 PM IST
Highlights

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொடர்ந்து முன்னிலையில் இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கடைசி சுற்றுகளில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
 

‘கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்த நாள் முதலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ்-பாஜக-மக்கள் நீதி மய்யம் என்று மும்முனை போட்டி ஏற்பட்டது. என்றாலும் பாஜக வேட்பாளர் வானதிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. அது இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து  உறுதியானது.
காலையில் ஆரம்ப சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் கமல்ஹாசனும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு கட்டத்தில் மயூரா ஜெயக்குமார் பின்தங்க, வானதிக்கும் கமலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாலை வரை கமல்ஹாசனே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். எப்படியும் இந்தத் தொகுதியில் கமல் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி சுற்றுகளில் வானதி சீனிவாசன்  திடீரென முன்னிலைப் பெறத் தொடங்கினார். இதனால், வெற்றி மதில் மேல் பூனையானது.
ஆனால், கடைசி சுற்றுகளில் வானதி சீனிவாசன் தொடர்ந்து முன்னிலை பெற, இறுதியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மட்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பும் பறிபோனது.

click me!