ரசிகர்களை அன்பால் அதட்டிய கமல்...! ஏன் தெரியுமா?

First Published Apr 1, 2018, 5:47 PM IST
Highlights
Kamal Hassans engaging speech fans fury


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன், தொண்டர்களை அன்பாக கண்டித்தார்.

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்றார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 
 
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 48 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல் ஹாசன், தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசிற்கு தான் ஸ்டெர்லைடுக்கு எதிராக மக்கள் போராடுவது கேட்கவில்லை; மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும் என்றார். மேலும் தான் இங்கு சக மனிதராக வந்திருப்பதாகவும், ஓட்டு வேட்டைக்காக வரவில்லை என்றும் தெரிவித்தார்.

கமல் ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சலிட்டனர். தான் பேசும்போது, தொண்டர்கள் எழுப்பிய கூச்சல் இடையூறாக இருந்ததால், கோபமடைந்த கமல், அவர்களை நோக்கி அதட்டினார். எதற்காக... யாருக்காக பேசிக் கொண்டிருக்கிறேன். அதனை மறந்து கூச்சலிடலாமா என்ற தொணியில் அவர்களை அதட்டினார். கமலின் அதட்டலால் சிறிது நேரம் அமைதிகாத்த தொண்டர்களிடம், மீண்டும் கமல் சிரித்துக் கொண்டே இது என் குடும்பம் அப்படித்தான் அதட்டுவேன் என்று கூறினார். கமலின் இந்த பேச்சைக் கேட்ட அவரது ரசிகர்கள் மீண்டும் உற்சாக குரலெழுப்பினர்.

click me!