தோல்வி அடைந்தது ஏன்?... ஆலோசனை நடத்திய கையோடு ஸ்டாலின் இல்லத்திற்கு விரைந்த கமல்... எதற்காக தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 4, 2021, 6:53 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். 

சட்டமன்ற தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி பல்வேறு தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூட நீண்ட இழுபறிக்கிடையே, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,358 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 

மேலும், அவருடைய கட்சி சார்பில் போட்டியிட்ட துணை தலைவர் மகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான சி.கே.குமரவேல், பழ.கருப்பையா, பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு உள்ளிட்டோரும் தோல்வியைச் சந்தித்தனர். சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை தழுவியதோடு, வாக்கு சதவீதத்தில் 3வது இடத்தை கூட பிடிக்காமல் போனது. எனவே தோல்விக்கான காரணம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மநீம வேட்பாளர்களுடன் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினர். 

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு வருங்கால முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினையும் நேரில் சந்தித்து, மலர் கொத்து கொடுத்து மனதார வாழ்த்துக் கூறினார். இதற்கு முன்னதாகவே கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பெருவெற்றி பெற்றுள்ள திமுக தலைவர்  அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!