மருத்துவ மாணவி கனிமொழியின் கல்விச் செலவை ஏற்றார் கமல்ஹாசன்… ரூ. 5 லட்சம் நிதியுதவி !!

By Selvanayagam PFirst Published Sep 13, 2018, 6:05 AM IST
Highlights

மருத்துவப்படிப்பை தொடர முடியாமல்  கூலி வேலைக்கு சென்று வந்த  பெரம்பலூர் மாணவி கனிமொழிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் ரு. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.அவரது படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக கமல் அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணி மல்லிகா தம்பதியின் மகள் கனிமொழி. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் , பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், 2014ம் ஆண்டு, ப்ளஸ் 2 தேர்வில், 1,127 மதிப்பெண் பெற்றார். 191.05, 'கட் ஆப்' பெற்ற கனிமொழிக்கு இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு கிடைத்தது

கனிமொழியின் பெற்றோர்கள் கூலித் தொழில் செய்தும் கடன்கள் பெற்றும் கடந்த  3 ஆண்டுகளாக  மகளின் மருத்துவ படிப்புக்கு கட்டணம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால் ஓர் விபத்தினால் கனிமொழியின் தந்தையால் நடக்க முடியாமல் போக அவரால் வேலைக்கும் செல்ல இயலவில்லை.

கனிமொழியின் தாய் வேலை செய்து கொண்டு வரும் கூலி, வீட்டிற்கே பத்தாத நிலையில் கனிமொழியின் கல்லூரி கட்டணம் தடைப்பட்டது. மேலும் காது கேளாத தனது சகோதரியின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படும் சூழலில் அவதிப்படுகிறது இவரது குடும்பம். இதனால் தானே வீட்டுச் சூழலுக்கு உதவ கூலி வேலை செய்து வருகிறார் கனிமொழி.

வறுமையான சூழ்நிலை இருந்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரியர் எதுவும் இல்லாமல் தேர்ச்சி பெற்று வந்துள்ளார் இவர். இந்த ஆண்டு தேர்வை எழுதி முடித்தால் மட்டுமே தேர்ச்சி பெரமுடியும் என்ற சூழலில், கனிமொழிக்கு கல்லூரிக்கு செல்வதே கேள்விக்குறியாக  இருந்தது.

தற்போது கனிமொழி படிப்பை முடிக்க 5 லட்சம் ரூபாய் கல்விக்ட்டணம் செலுத்த வேண்டும். அந்த பணம் கிடைக்காததால் கனிமொழி தனது படிப்பை விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

கனிமொழி குறித்து கேள்விப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவரது படிப்புக்கான செலவை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கனிமொழி அவரது தந்தை,தாய் மற்றும் தங்கை ஆகியோர் சென்னையில் நடிகர் கமலஹாசளை சந்தித்தனர்.

கனிமொழி வருகின்ற பிப்ரவரி மாதம் தனது மருத்துவ படிப்பினை முடிக்கவுள்ள நிலையில் அவரது  கல்விச்செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, அவரது திறன் மேம்பாட்டு மேற்கல்விக்கான அனைத்து உதவிகளையும்அண்ணன் சந்திரஹாசன் அறக்கட்டளையேஏற்கும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார். இதற்காக முதல் கட்டமாக  5 லட்சம் ரூபாயை கனிமொழியிடம் கமல் வழங்கினார்.

click me!